ஈரோடு: ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திமுக அரசின் இரண்டரை ஆண்டுகள் சாதனை விளக்கப் புகைப்பட கண்காட்சியை மதுவிலக்கு ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து சமூக நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச வாகனங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஈரோட்டில் பழமையான சிக்க நாயக்கர் கல்லூரியை அரசு எடுத்துக் கொள்ள மத்திய அரசிடம் ஒப்பந்தம் பெறக் கோப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. அதன் பேரில் ஒப்புதல் கிடைத்தவுடன் கல்லூரியுடன் சேர்த்து உள்கட்டமைப்பு, விளையாட்டு அரங்கம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் நீண்ட மாதங்கள் கடந்தும் இதுவரை மத்திய அரசு அனுமதி தரவில்லை.
வஉசி பூங்கா: வஉசி பூங்கா சீரமைக்க ரூ.15 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
குஷ்பு கருத்து: மகளிர் உரிமைத் திட்டத்தில் பயனடைந்தும் வரும் பெண்கள் மற்றும் பயன்பெறாத பெண்கள் கூட குஷ்புக்கு பதில் சொல்லி வருகிறார்கள். அவர் சொன்ன கருத்தைத் திரும்பப் பெற்றால் பிரச்சனை முடிந்துவிடும் என நினைக்கிறேன்.
பாஜக ஆட்சிக்கு வந்தால் கள்ளுக்கடைகள் திறக்கப்படும் என்ற கருத்துக்கு, பாஜக ஆட்சிக்கு வராது. சிறுபான்மையினருக்குப் பாதுகாப்பு இல்லை என எடப்பாடி கருத்துக்கு, எடப்பாடி மத்திய அரசைப் பார்த்துக் கேட்க வேண்டிய கேள்வியை இங்கே கேட்கிறார்.
டாஸ்மாக்: தமிழகத்தில் மதுக் கடைகளில் டிஜிட்டல் முறை பணப் பரிவர்த்தனை மூன்று மாவட்டங்களில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யக் கால அவகாசம் தேவை என்பதால் துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
பிரதமர் நரேந்திர மோடியை அநாகரீகமாகப் பேசவில்லை. அதற்கு மாறாக அரசுக்கு ஏற்படும் பாதிப்புகளைத் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார்.
சென்னை பேரிடர், தென் மாவட்டம் போன்ற பேரிடருக்கு மத்திய அரசு நிதியைத் தரவில்லை அப்படி உள்ள சூழலில் முதலமைச்சர் எங்கே சென்று தனது உண்மைகளைச் சொல்வார். தனியாகத் தனி அறையில் சென்று சொல்லிக் கொண்டு இருப்பார். மக்கள் மத்தியில் தான் குறைகளைச் சொல்ல முடியும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: போதைப் பொருள் கடத்தல் விவகாரம்; ஜாபர் சாதிக் கூட்டாளி சதானந்தத்தை ஒரு நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவு!