கோயம்புத்தூர்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் 13ஆம் தேதி பொள்ளாச்சியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார். இந்நிலையில், கோவை சாலையில் உள்ள நிகழ்ச்சி அரங்கில், தமிழ்நாடு வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி தலைமையில், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் இன்று (மார்ச் 7) நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பேசிய அமைச்சர், “தமிழக அரசு செய்த நல்ல பல திட்டங்களை வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கட்சி நிர்வாகிகள் பொதுமக்களிடம் தெரிவிக்க வேண்டும். முக்கியமாக கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி மற்றும் பொள்ளாச்சியை மாவட்டமாக அறிவிக்கக்கோரி தமிழக முதலமைச்சரிடம் வலியுறுத்தப்படும்.
மேலும், தமிழக முதலமைச்சர் வருகையையொட்டி, பொதுமக்கள் காலை 8.30 மணி அளவில் வர தொடங்குவர். ஆதலால் பொதுமக்கள் இருக்கும் இடங்களில், குறிப்பாக பெண்கள் இருக்கும் இடத்தில் பெண் கட்சி நிர்வாகி 10 பேர் அப்பகுதியில் இருக்க வேண்டும்.
அதேபோல, ஆண்கள் உள்ள பகுதிகளும் கட்சி நிர்வாகிகள் 10 பேர் இருக்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொடுக்க வேண்டும். மேலும் திருப்பூர், ஈரோடு, கோவை என மூன்று மாவட்டங்களில் இருந்து அதிகமான கட்சி நிர்வாகிகள் வரக்கூடும். ஆதலால், அவர்களுக்கு என்று தனி இடம் ஒதுக்கப்படும்.
மேலும், முதலமைச்சரை வரவேற்கும் விதமாக, சாலைகள் ஓரம் கட் அவுட் வைக்க வேண்டாம் என கட்சி நிர்வாகிகளுக்கு அமைச்சர் கட்டளையிட்டுள்ளார். அப்படி கட் அவுட் வைக்க வேண்டும் என்றால், சொந்த இடத்தில் வைக்க வேண்டும்.கொடிக்கம்பங்கள் மின்கம்பங்களில் படாதவாறு வைக்க வேண்டும்.
கூட்டம் முடிந்தவுடன், மாவட்டச் செயலாளர் மற்றும் கட்சி நிர்வாகிகள், அதற்கு என ஆட்களை வைத்து சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அதிகம் வருவதால், காவல்துறைக்கு நமது தொண்டர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.
இந்த கூட்டத்தை நகர மற்றும் ஒன்றிய பொறுப்பாளர்கள் அனைவரும் ஒன்று கூடி சிறப்பாக நடத்த வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார். இதில், முன்னாள் அமைச்சர் உயர்நிலை திட்டக்குழு உறுப்பினர் மு.கண்ணப்பன் நாடாளுமன்ற உறுப்பினர் கு.சண்முகசுந்தரம், தகவல் தொழில் நுட்ப அணி இணைச் செயலாளர் மருத்துவர் மகேந்திரன் உ:பட கட்சி நிர்வாகிகள் ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் நிதித்துறை செயலாளர் பதிலளிக்க உத்தரவு!