மதுரை: திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், மதுரை தெற்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலர் மு.மணிமாறன் தலைமையில், மாவட்ட துணைச் செயலர் ஆர்.பாலாஜி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஏர்போர்ட் பாண்டியன், கே.ஐ.மகிழன், பொருளாளர் கொம்பாடி தங்கம் ஆகியோர் முன்னிலை வகித்த இந்த கூட்டத்தில், அமைச்சர் பி.மூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார்.
அப்போது மேடையில் பேசிய வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, "மதுரையில் வருகிற 9ஆம் தேதி இலவச வீட்டுமனை பட்டா, மகளிர் சுய உதவி குழுவினருக்கு கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை 20 ஆயிரம் பேருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்க உள்ளார். அதற்காக வருகிற 8ஆம் தேதி மதுரை வரும் அவருக்கு நாம் சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும். கடந்த 3 ஆண்டுகால முதலமைச்சரின் சிறப்பான ஆட்சிக்கு மக்களவைத் தேர்தலில் 39 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற்றுள்ளோம்.
விரைவில் வருகிற 2026 பொதுத் தேர்தல் பணிகளைத் தொடங்க உள்ளோம். நாம் சாதி, மதம் பார்க்காமல் கட்சிக்காக வாக்களிக்க வேண்டும். திருமங்கலத்தில் மக்களவைத் தேர்தலில் திமுகவினரே ஒரு சிலர் மாற்றி வாக்களித்ததால் தான் நமக்கு வாக்கு குறைந்துள்ளது. இனிவரும் காலங்களில் இதுபோன்று நடக்கக் கூடாது. வருங்காலத்தில் திருமங்கலத்தில் அதிக கவனம் செலுத்தி வெற்றி பெற உழைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் நமது இலக்கு 200 தொகுதிகள்” என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், “தற்போது நடிகர் விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பித்துள்ளார்கள். அதனை எளிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது. கூட்டணிக் கட்சிகள் இருந்தாலும், நமது வாக்கு வங்கியை உயர்த்த தற்போதிலிருந்தே பணிகளைச் செய்ய வேண்டும். அனைத்து கிராமங்களிலும் கட்சிக் கொடி ஏற்ற வேண்டும். தமிழக திட்டங்கள் குறித்து மக்களிடம் கூற வேண்டும்.
முதலமைச்சரின் அமெரிக்க பயணம் வெற்றி பெறும் என்பதில் எந்தவித மாற்றமும் இல்லை. 2026-ல் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்ற வேண்டும். யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசுவார்கள். அவர்கள் பேசட்டும், நாம் செயலில் காட்டுவோம்" எனத் தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: விஜய் சொன்னது பொய்.. எச்.ராஜா ஆவேசமானது ஏன்?