தஞ்சாவூர்: தஞ்சாவூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் முரசொலிக்கு வாக்கு கேட்டு சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்ய நாதன், பேராவூரணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அசோக்குமார் ஆகியோர் இன்று (ஏப் 03) ஒட்டங்காடு, புனல் வாசல், பதிரன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது பேசிய அமைச்சர்,"மற்ற தேர்தலுக்கும், இந்த தேர்தலுக்கும் நிறைய வேறுபாடு இருக்கிறது. கடந்த 10 ஆண்டுக் காலம் இந்தியத் தேசத்தில் பாஜக ஆட்சி செய்தது. மக்களுக்கான எந்த திட்டங்களையும் நிறைவேற்றாமல் முதலாளிகளுக்கான ஆட்சியாக அது இருந்திருக்கிறது.
அதன் காரணமாக இந்த தேசத்தில் ஏழை மக்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது. வேலைவாய்ப்பு முழுமையாக இல்லாத சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி, இப்படி பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் இந்தியா இருக்கிறது.
தேர்தல் களத்தில் பாஜக கூட்டணியில் யாரெல்லாம் இருக்கிறார்களோ அவர்களுக்குக் கேட்ட சின்னம் தேர்தல் கமிஷன் கொடுக்கிறார்கள். பாஜக கூட்டணியில் இல்லையென்றால் அவர்கள் விண்ணப்பித்த சின்னம் வழங்கப்படவில்லை. இதிலிருந்து தெரிகிறதா ஜனநாயக நாடு எந்த திசையை நோக்கிச் செல்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: நம்முடைய பகுதி சுத்தமான, சுகாதாரமான காற்றைச் சுவாசிக்கின்ற பகுதி, இதைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக ஏன் அறிவித்தோம் என்றால், ஹைட்ரோ கார்பன் போன்ற அபாயகரமான திட்டத்தைக் கொண்டு வந்த பாஜக முன்னெடுத்த போது அதைத் தடுத்து நிறுத்தியவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.
தமிழ்நாட்டில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்றால் எனது துறையின் கீழ் தான் அனுமதி வழங்க வேண்டும். அதனால் ஆட்சி தொடங்கியவுடன் அரியலூர், கடலூர் மாவட்டங்களில் 21 இடங்களில் மத்திய அரசு கேட்டவுடன் உடனடியாக நிராகரிக்க வேண்டும் என்று நான் கூறினேன். அதற்கான உத்தரவைப் பிறப்பித்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.
இனி வரும் பாஜக ஆட்சியில் தேர்தல் இருக்காது: இந்தத் தேர்தலில் அடுத்த தலைமுறையைப் பாதுகாக்க வேண்டும். இந்த தேசத்தைப் பாதுகாக்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் இருக்கிறது. இனி தேர்தல் நடக்க வேண்டுமா? வேண்டாமா ? என முடிவு செய்ய வேண்டிய நிலையில் இருக்கிறோம். தப்பித்தவறி பாஜக இந்த நாட்டில் ஆட்சிக்கு வந்தால் இனி தேர்தலே இருக்காது. சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல, உள்ளாட்சித் தேர்தலும் நடக்காது.
டெல்லி முதலமைச்சர் கைது: டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருக்கிறபோது தேர்தல் அறிவித்த பிறகு அவரை கைது செய்து திகார் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்றால் ஜனநாயகம் எதை நோக்கிச் செல்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். உலக நாடுகள் கண்டித்திருக்கின்றன. ஐநா சபை இதைக் கண்டித்திருக்கிறது என்றால், நாம் கண்டிக்க வேண்டாம்.
வாக்குச் சீட்டு என்ற மிகப்பெரிய ஆயுதம் நம் கையில் இருக்கிறது. வருகின்ற 19ஆம் தேதி உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இந்த பிரச்சாரத்தில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: தமிழக அரசு சார்பில் சட்டவிரோத கட்டுமானங்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? - மதுரை ஐக்கோர்ட் கேள்வி - Illegal Constructions In Tamil Nadu