சென்னை: 2024 - 2025ஆம் ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜூன் 20ஆம் தேதி துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் துறைகள் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (ஜூன் 27) சட்டமன்றக் கூட்டத்தொடரில் வினாக்கள் - விடை நேரத்தில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கண்ணன், அமைச்சர் மதிவேந்தனிடம் கேள்வியெழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், “அணைக்கரை பகுதியில் முதலைகள் பாதுகாப்பு மையம் 2.50 கோடி ரூபாய் செலவில் கட்டப்படும். மேலும், பல மாவட்டங்களில் குரங்குகள் குடியுருப்புகளுள் புகுந்து தொல்லை செய்யும் நிலை இருந்தால், அதற்கு மாவட்ட வன அலுவலர்களை தொடர்பு கொண்டு புகார் அளிக்கும் பட்சத்தில், வனத்துறையினர் குரங்குகளை கூண்டில் அடைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அதேபோல், விளைநிலங்களை மயில்கள் சேதப்படுத்துவதாக தொடர் புகார்கள் வருகிறது. மயில் நம் நாட்டின் தேசியப் பறவை என்பதால் அதனை சிறையில் அடைக்க முடியாது. அதனால் விளைநிலங்களில் மயில்களால் ஏற்படும் சேதங்களை குறைப்பதற்கான ஆய்வுகளை தனியார் நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது” எனக் கூறினார்.
இதையும் படிங்க: காரைக்குடி டூ சென்னைக்கு ஏசி ஸ்லீப்பர் பஸ் கேட்ட உறுப்பினர்.. அமைச்சரின் பதிலால் அவையில் சிரிப்பலை!