சென்னை: உலகின் பல்வேறு நாடுகளில் குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் குரங்கம்மை நோய் பாதிப்பு ஏற்பட்ட நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனைகள் செய்யப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விமான நிலையங்களிலும் குரங்கம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலைய சர்வதேச முனையத்தில் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு குரங்கம்மை பரிசோதனை செய்யப்படுவது குறித்து ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கடந்த 1958 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா வனப் பகுதி குரங்குகளிடம் இருந்து கண்டறியபட்ட குரங்கம்மை தற்போது அமெரிக்கா, ஐரோப்பா, சீனா போன்ற 116 நாடுகளில் பரவியிருக்கிறது. இதனால் உலக சுகாதார நிலையம் இதனை அவசர நிலை பிரகடனமாக அறிவித்துள்ளதால் மத்திய அரசு பல பாதுகாப்பு நடவடிக்கைகளை முறையாக மேற்கொண்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் ஆகிய நான்கு விமான நிலையங்களில் குரங்கம்மை பரிசோதனை துவங்கப்பட்டுள்ளது. கரோனா காலம் போல் சர்வதேச விமான பயணிகளின் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டு, காய்ச்சல் கண்டறியபட்டால் விமான நிலையத்திலேயே தனிமைப்படுத்தி முதலுதவி செய்த பின்னர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் “குரங்கம்மை” கண்காணிப்பு பணி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/vTH1pmtm9I
— Subramanian.Ma (@Subramanian_ma) August 21, 2024
இதற்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் 10 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கபட்டுள்ளது. அதேபோல் கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய விமான நிலையங்களின் அருகில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 படுக்கைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேலும், பொதுமக்கள் கொப்பளம் காய்ச்சல் போன்ற குரங்கம்மை அறிகுறிகள் கண்டறியபட்டால் வீட்டிலேயே தங்கிவிடாமல் உடனே அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். அதேபோல் தமிழக அரசு விமானம் மற்றும் கப்பல் மூலம் தமிழகம் வரும் வெளிநாட்டு பயணிகளை தீவிரமாக பரிசோதித்து வருகிறது.
கரோனா போன்று குரங்கம்மை பெரியளவில் பரவி பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. கரோனா காலம் போல் குரங்கம்மையையும், போதிய பாதுகாப்பு அம்சங்களுடன் மருத்துவர்கள் கையாண்டு சிகிச்சை அளிப்பார்கள். தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் கொல்கத்தா போன்ற சம்பவம் இங்கு நிகழாது" என தெரிவித்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க : தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு இன்று துவக்கம் - Medical Admission Counselling