கோயம்புத்தூர்: பொள்ளாச்சி டாக்டர் மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் பயனாளிகளுக்கு காப்பீட்டுத் திட்ட அட்டைகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரணியன் ஆகியோர் வழங்கினர். தொடர்ந்து, இலவச வீட்டு மனைபட்டா மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களுக்குக் கடன் வழங்கப்பட்டது.
பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ரூ.3 கோடியே 15 லட்சம் மதிப்பில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு, ஒருங்கிணைந்த அவசர சிகிச்சை பிரிவை இணைக்கும் வகையில், இணைப்பு சாய் தளத்துடன் கூடிய கட்டிடம் மற்றும் ஒருங்கிணைந்த பரிசோதனை கூடம் திறப்பு விழா நேற்று (பிப்.9) நடைபெற்றது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "கோவை, திருப்பூர் மாவட்டங்களில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு அட்டைகள் 37 ஆயிரத்து 173 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளது. கரோனா பெருந்தொற்று காலத்தில் ஒப்பந்த செவிலியர்கள் பணி நியமனம் செய்யப்பட்டு, பின்னர் அவர்கள் பணி விடுப்பு செய்யப்பட்டனர். ஆனால், அந்த ஒப்பந்த செவிலியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரிக்கை விடுத்தனர்.
இதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி அந்த ஒப்பந்த செவிலியர்கள் 977 பேருக்கு மீண்டும் பணி நியமனம் வழங்க அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் வரும் 12ஆம் தேதி நடைபெறும் விழாவில் அவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும்" என்றார்.
மேலும், மதுரையில் பரவும் எலி காய்ச்சல் தொடர்பாக பொது சுகாதாரத் துறைத் சார்பில் அதிகாரிகளை அனுப்பி உசிலம்பட்டி கிராமத்தில் எங்கிருந்து குடிநீர் எடுக்கப்படுகிறது? சுகாதார சேவைகள் எப்படி இருக்கிறது? உள்ளிட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகவும் உள்ளாட்சி நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வுகளை மேற்கொள்ள அறிவுறுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும், அந்த பகுதியில் நீர் மாசுபாடு உள்ளதா? என்பதை ஆய்வகங்கள் மூலம் தரத்தை ஆய்வு செய்ய வலியுறுத்தி உள்ளதாகவும், தற்போது எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலமுடன் இருப்பதாகவும், இருப்பினும் துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாம்பரம் காவல் ஆணையர் அலுவலக ஒப்பந்த விவகாரம்; தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!