சென்னை: சைதாப்பேட்டை மார்கெட் அருகில் வாட்டர் கூலர் (Water cooler) வசதியுடன் கூடிய பழச்சாறு, மோர், இளநீர் வழங்க கூடிய தண்ணீர் பந்தலை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது, “தமிழ்நாட்டில் வெப்ப அலைகள் வீசி கொண்டிருப்பதாலும், கோடை வெப்பம் மக்களை மிகப்பெரிய அளவில் பாதிப்பதாலும், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் இளைஞரணி சார்பில் குடிநீர் பந்தல் அமைத்து, குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்கள்.
அந்த வகையில், சென்னையின் பல்வேறு இடங்களில் குடிநீர் பந்தல் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. ஆனால், தேர்தல் ஆணையம் நடத்தை விதிமுறைகள் இன்னும் அமலில் இருப்பதால், ஜீன் 4ஆம் தேதிக்கு முன்னால் அரசியல் இயக்கங்களின் சார்பில் குடிநீர் பந்தல் அமைக்கக்கூடாது என வைக்கப்பட்டிருந்த குடிநீர் பந்தல்களை அகற்றினார்கள்.
இந்த நிலையில், கடந்த வாரம் சைதாப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சியில், கோடை வெப்பம் தகித்துக் கொண்டிருந்த சூழலில் அரசியல் இயக்கங்களில் சார்பில் குடிநீர் பந்தல்களை அமைத்து, தண்ணீர் விநியோகிப்பதற்கு தடை விதிக்கக்கூடாது என தேர்தல் ஆணையத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன். அதன் அடிப்படையில். தலைமை தேர்தல் ஆணையத்தின் சார்பில், பத்திரிகை குறிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி, தன்ணீர் பந்தல் அமைப்பதற்கு தடை இல்லை என்கிற வகையில், தேர்தல் ஆணையம் அந்த தடையை விலக்கிக் கொண்டுள்ளது. அதற்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது பொதுமக்களுக்கு செய்கின்ற சேவை. எந்த அரசியல் அமைப்பு செய்தாலும் அதனைத் தடுக்கவும், முடக்கவும் எந்த அரசு நிர்வாகமும் முனைந்திடக் கூடாது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் 45 நாட்களுக்கும் மேலாக தமிழ்நாட்டில் இருக்கும் நிலையில், பெரிய அளவிலான சேவைத் துறைகளின் பணிகள் பாதிக்கப்படுகிறது. இதனால் மக்கள் பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து பணிபுரிய தடை உள்ளது. மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் மூடப்பட்டுள்ளது. எனவே, மருத்துவம் மற்றும் அடிப்படை சேவை துறைகளின் மக்கள் பிரதிநிதிகள் துறை சார்ந்த அலுவலர்களுடன் இணைந்து பணிபுரிய உள்ள தடையை தேர்தல் ஆணையம் நீக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளால், ஏற்காட்டில் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சென்று பார்வையிட்டு அவர்களுக்கு உறுதுணை அளிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது” இவ்வாரு அவர் கூறினார்.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு போட்டியாக உ.பி. அமைச்சரை களமிறக்கும் பாஜக! யார் இந்த தினேஷ் பிரதாப் சிங்? - Rae Bareli BJP Candidate