சென்னை : சென்னை ராமாபுரத்தில் வாக்காளர்கள் அடையாள அட்டை முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மதுரவாயல் எம்.எல்.ஏ கணபதி மற்றும் கவுன்சிலர்கள், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அப்போது அரசுப் பள்ளியில் நடைபெற்ற வாக்காளர் அடையாள அட்டை புதுப்பித்தல் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார். வாக்காளர் அட்டை முகாமை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர், "வாக்காளர் அடையாள அட்டை முகாம் இன்று ராமாபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டைக்கு விண்ணப்பிப்பவர்கள் மற்றும் முகவரி மாற்றுபவர்கள் உள்ளிட்ட அனைத்து வித மாற்றங்களையும் செய்து கொள்ள முடியும்.
மதுரவாயில் தொகுதி இராமாபுரத்தில் வாக்காளர் சேர்ப்பு, நீக்கல், திருத்தல் சரிபார்க்கும் பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. #Masubramanian #TNHealthminister #DMK4TN pic.twitter.com/ch2gi3BcWw
— Subramanian.Ma (@Subramanian_ma) November 16, 2024
அதே சமயம் இறந்தவர்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு இறப்புச் சான்றிதழை சமர்ப்பித்து நீக்கிக் கொள்ள முடியும். இந்த முகாமை மக்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொண்டு தங்கள் வாக்காளர் அடையாள அட்டைகளை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் எலி மருந்து கசிந்து இரு குழந்தைகள் பலி தொடர்பான கேள்விக்கு, எலி மருந்து விவகாரம் தொடர்பாக அலுவலர்களிடம் இருந்து தகவல் வந்தவுடன் நடவடிக்கை பாயும். இனிமேல் எந்தெந்த மருந்துகளை விற்கக் கூடாது எந்தெந்த மருந்துகளை விற்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகள் கடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ளன. அதே சமயம் மருந்துக் கட்டுப்பாடுகள் குறித்து ஆராய்வதற்கு அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என தெரிவித்தார்.
இதையும் படிங்க : இரு பிஞ்சுகளின் உயிரைப் பறித்த எலி மருந்து.. தனியார் நிறுவன ஊழியர்கள் இருவர் கைது.. அபாய கட்டத்தை தாண்டிய பெற்றோர்!
முன்னதாக, சென்னை குன்றத்தூர் அடுத்த மணஞ்சேரி பகுதியைச் கிரிதரன் என்பவர் தனது வீட்டில் அதிகமான எலித் தொல்லை இருந்ததால், அவற்றை விரட்டுவதற்காக தனியார் நிறுவனத்தை அணுகி, அந்நிறுவன ஊழியர்கள் வாயிலாக வீட்டில் ஆங்காங்கே எலி மருந்து வைத்துள்ளார்.
இரவு நேரத்தில், கிரிதரன் அவரது மனைவி பவித்ரா மற்றும் இரு குழந்தைகள் என குடும்பத்தினர் ஏசி போட்டு தூங்கி உள்ளனர். இதனால் ஏலி மருந்தானது காற்றில் பரவி உள்ளது. எலி மருந்து காற்றில் பரவியதால், வீட்டில் இருந்த அனைவருக்கும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அருகில் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், இரு குழந்தைகள் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுதொடர்பாக குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் நிறுவனத்தின் ஊழியர்கள் தினகரன் மற்றும் சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்தனர். உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்