சென்னை: புனேவில் உள்ள ஆய்வு நிறுவனத்திடமிருந்து பெறப்பட்ட இறுதி ஆய்வறிக்கையின் அடிப்படையில் தமிழகத்தில் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரங்கம்மை முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. ஆப்பிரிக்காவிலுள்ள காங்கோ நாட்டில் வேகமாக பரவி வரும் குரங்கம்மை தொற்றால் பொது சுகாதார அவசர நிலையாக (Public Health Emergency of International Concern) கடந்த ஆகஸ்ட் 14 ஆம் தேதி உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் குரங்கம்மை தொற்று நோய் தடுப்பதற்காக பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கு குரங்கம்மை தொற்று நோய் தடுப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோய் பற்றிய நிலையான வழிமுறை கையேடு செப்.2 ஆம் தேதி வெளியிடப்பட்டது.
பாதுகாப்பு நடவடிக்கை: விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கும் குரங்கம்மை தொற்று நோய் குறித்த தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டி அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. 108 அவசர ஊர்தி தற்காப்பு, கவச உடை அணிந்த பணியாளர்களுடன் தேவை ஏற்படின் பயன்படுத்திட ஏதுவாக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிறப்பு தனிமைப்படுத்துதல் வார்டு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
கடந்த அக்.31-ஆம் தேதி சாா்ஜா நாட்டில் இருந்து திருச்சி விமான நிலையம் வந்தடைந்த ஒரு பயணிக்கு குரங்கு அம்மை தொற்று சந்தேகிக்கப்பட்டது. அந்தப் பயணி திருச்சி மகாத்மா காந்தி மருத்துவமனைக்கு பரிசோதனை மற்றும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அந்த மருத்துவமனையில் அவர் தப்பி விட்டதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் திருவாரூர் மாவட்டத்தில் கண்டறியப்பட்டார்.
இதையும் படிங்க: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம் நடத்த தடை - ஐகோர்ட் முக்கிய அறிவுறுத்தல்!
இதையடுத்து, உடனடி மருத்துவ ஆலோசனைக்காக திருவாரூர் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் தனிமைப்படுத்தப்பட்டு மேல் சிகிச்சை மற்றும் குரங்கு அம்மை பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரிடமிருந்து குரங்கு அம்மை பரிசோதனைக்காக உரிய மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சென்னை கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
இம்மாதிரியின் ஒரு பகுதி, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆய்வக நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சென்னை கிங் இன்ஸ்டிடியூட் ஆய்வகத்தின் ஆரம்பக்கட்ட பரிசோதனை முடிவில், அவருக்கு குரங்கு அம்மை தொற்று இல்லை எனக் கண்டறியப்பட்டது. பெறப்பட்ட மாதிரியை பரிசோதனை செய்ததில் நோயாளி சின்னம்மை தீநுண்மியால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், தேசிய வைரஸ் ஆய்வக நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட இறுதி ஆய்வறிக்கையும் குரங்கம்மைத் தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தி உள்ளது. எனவே, பொதுமக்கள் இது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை. குரங்கு அம்மை குறித்த சந்தேகங்களுக்கு 104 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
கடந்த 21 நாள்களில் குரங்கு அம்மை தொற்று பரவி உள்ள 116 நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டவர்கள், தங்களுக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் ( காய்ச்சல், தோல் கொப்புளங்கள், கழுத்தில் நெறி கட்டி) காணப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனைகள், சுகாதார மையங்களை அணுக வேண்டும்” இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்