திருச்சி: திருச்சி ரயில் நிலையம் அருகே அரிஸ்டோ மேம்பாலம் பகுதியில் உள்ள ஜங்ஷன் ரயில்வே பாலம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது. பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் அரசு இந்த பாலத்தை மாற்றுவது குறித்து ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஏற்கனவே இந்த இடத்தில் பாலம் செயலில் இருக்கும் நிலையில் தற்போது அதன் அருகில் புதிய பாலம் கட்டப்படுவதற்காக திட்டமிட்டுள்ளது.
மேலும் இதற்கென ரூ.138 கோடி செலவில் புதிய பாலம் கட்டும் பணிக்கான கள ஆய்வு மற்றும் போக்குவரத்து மாற்றம் குறித்து தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் சென்று இன்று ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிலையில் இந்த ஆய்வின் போது திருச்சி தபால் நிலையத்திலிருந்து அரிஸ்டோ மேம்பாலம் ரவுண்டானா வரை போக்குவரத்து மாற்றம் குறித்து காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த கள ஆய்வின்போது மாநில நெடுஞ்சாலை துறை அதிகாரி மீனாட்சி, மாநகராட்சி ஆணையர் சரவணன், திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி, மேயர் அன்பழகன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: ராகுல் காந்திக்கு கொலை மிரட்டல்: மத்திய அமைச்சர் மீது நடவடிக்கை கோரி திருச்சி எஸ்பியிடம் காங்கிரஸ் மனு!
தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் கே.என்.நேரு கூறுகையில், "திருச்சி ஜங்ஷன் ரயில்வே பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்கான பணிகள் இன்னும் ஓரிரு நாளில் துவங்கப்படும்.
இந்த நிலையில் எடமலைப்பட்டி புதூரில் இருந்து வரும் வாகனங்கள், சென்னையில் இருந்து திண்டுக்கல் செல்லும் வாகனங்கள், டிவிஎஸ் டோல்கேட்டில் இருந்து காஜாநகர், பகுதிக்கு செல்லும் வாகனங்கள் எந்த வழியில் செல்ல வேண்டும் அதற்காக அகலப்படுத்தும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுள்ளது" என தெரிவித்துள்ளார்.