“ஊராட்சி மாநகராட்சியுடன் இணைவது அவரவர் விருப்பம்”- கே.என்.நேரு பேச்சு! - Nehru on Panchayat to Corporation - NEHRU ON PANCHAYAT TO CORPORATION
KN Nehru on Panchayat to Corporation: இந்த ஆண்டின் பருவ மழை 50 செ.மீ - 40 செ.மீ வரை பெய்தாலும் தமிழக அரசு சமாளிக்க தயாராக இருக்கிறது, அதற்காக 22 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது என திருச்சியில் அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.


Published : Aug 29, 2024, 5:53 PM IST
திருச்சி: தமிழக முதல்வர் கடந்த மாதம் மாவட்டம் வாரியாக கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் 245 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளை சென்னையில் வழங்கினார். அதில், திருச்சி மாவட்டத்திற்கு என மொத்தம் 9 ஊர்திகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ ஊர்தி சேவையை, இன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து, அந்தந்த பகுதிகளுக்கு ஊர்திகள் புறப்பட்டுச் சென்றன. இந்த ஊர்தியில் ஓட்டுநர், உதவியாளர், மருத்துவர் என மூன்று பேர் இடம்பெற்றுள்ளனர். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருத்துவ ஊர்தி மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ சேவைகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “மாரிஸ் தியேட்டர் மேம்பாலம் பணிகள் நடப்பதில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. அதற்கு காரணம் ரயில்வே நிர்வாகத்திடமிருந்து சில அனுமதிகள் பெற வேண்டும் என்பதால், அது காலதாமதம் ஆகிறது. தமிழக அரசு பாலத்தைக் கட்டுவதற்கு தயாராக இருக்கிறோம். இது குறித்து ரயில்வே கோட்ட மேலாளரிடம் மாவட்ட ஆட்சியர் பேசியுள்ளார், விரைவில் பணிகள் முடிக்கப்படும்.
இந்த மாதம் புதிய பேருந்து முனையம் தொடங்குவதாக கூறி கால அவகாசம் கொடுத்திருந்தோம். ஆனால், கூடுதலாக 100 கோடி ரூபாய்க்கான ரிவைஸ்டு எஸ்டிமேட் போடப்பட்டு, அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ளோம். அதில் கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, உணவகங்கள் போன்றவை இருக்கும் வகையில், டிசம்பருக்குள் கட்டுமானப் பணிகள் முழுமையாக நிறைவடையும் என்று எதிர்பார்க்கிறோம்.
வருகிற செப்டம்பர் 4ஆம் தேதி மழைநீர் அகற்றம் குறித்து ஆய்வுக் கூட்டம் நடக்க உள்ளது. இதுவரை சென்னை மாநகராட்சியில் 22 கோடி ரூபாய் மதிப்பிலான இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளது. அந்த இயந்திரங்களினால் மழைநீர் கால்வாய் மூலம் வெளியேறும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 50 செ.மீ - 40 செ.மீ மழை பெய்தாலும் நாம் சமாளிப்போம். இருப்பினும், கணேசா சப்வேயில் மட்டும் தண்ணீர் தேங்கி இருப்பதால் மோட்டார் பம்புகள் மூலம் வெளியேற்றுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் ஊராட்சிகள் மாநகராட்சியுடன் இணைவதில் மறுப்பு தெரிவிப்பது குறித்து பேசிய அவர், “யார் விருப்பப்படுகிறார்களோ, அவர்கள் திருச்சி மாநகராட்சியுடன் வந்து இணைந்து கொள்ளலாம். நாளுக்கு நாள் மாநகராட்சியின் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. அதேநேரம், வெளி மாவட்டங்களில் இருந்து திருச்சிக்கு வரக்கூடிய பொதுமக்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
எனவே, ஊராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தினால் மட்டுமே பொதுமக்கள் வந்து குடியேறுவதற்கு ஏதுவாக அமையும். இதனை கருத்தில் கொண்டு மாநகராட்சி உடன் ஊராட்சிகளை இணைக்க அரசு முடிவு செய்துள்ளது. நாங்கள் யாரையும் வலுக்கட்டாயமாக மாநகராட்சியுடன் இணைக்க விரும்பவில்லை.
சமயபுரம், மண்ணச்சநல்லூர், மாந்துறை, லால்குடி உள்ளிட்ட பகுதிகளில் அவர்கள் மாநகராட்சியுடன் இணைப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றி கையெழுத்து போட்டுக் கொடுத்துள்ளனர். அதில் இரண்டு கிராமங்களை மட்டும் சேர்க்க வேண்டாம் என்று கூறினார்கள். அதை வேண்டாம் என்று நாங்கள் நிராகரித்து விட்டோம்.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: காரைக்குடியை நகராட்சியாக மாற்றியதால் 100 நாள் வேலைத்திட்டம் பாதிப்பு.. எம்எல்ஏ அலுவலகம் முற்றுகை!