சென்னை: மதுரை புறநகர் பகுதியில் ரூ.2 ஆயிரம் கோடியிலும், மாநகர் பகுதியில் ரூ.1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையின் கூட்டத்தொடர் இன்று (டிச.09) திங்கள்கிழமை காலை 9.30 மணிக்கு தொடங்கியது. பேரவையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு முதல் வரிசையில் மூன்றாவது இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதலமைச்சர் மற்றும் அமைச்சர் துரைமுருகனுக்கு அடுத்த இருக்கையில்உதயநிதி ஸ்டாலின் அமர்ந்துள்ளார். அவை தொடங்கியதும் மறைந்த பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முகமது கனி, ஒ.ஆர்.இராமச்சந்திரன், கோதண்டம், சுப்புராயர், தொழிலதிபர் ரத்தன் டாடா, சீதாராம் யெச்சூரி, முரசொலி செல்வம் உள்ளிட்டோருக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, வினா விடை நேரத்தில், மதுரை பாலம் சீரமைப்பு குறித்து சட்டமன்ற உறுப்பினர் ராமசந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு பதில் அளித்து, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டப்பேரவையில் பேசியதாவது, “அறந்தாங்கி நகராட்சி வார்டு எண்-22 அவுலியா நகர், முதல் வீதியில் பழுதடைந்த பாலம் நீக்கப்பட்டு, புதிய காங்கிரீட் பாலம் மற்றும் 34 மீட்டர் நீளமுள்ள மழை நீர் வடிகால், ரூ. 2.25 லட்சம் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டு தற்போது பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
அறந்தாங்கி நகராட்சியில் 3 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள்:
பணிகள் | மதிப்பு(ரூபாயில்) |
சாலை பணிகள் | ரூ. 15 கோடி |
வடிகால் பணிகள் | ரூ. 43 லட்சம் |
வாகனங்கள் வாங்குவதற்கு | ரூ. 90 லட்சம் |
குடிநீர் அபிவிருத்தி பணி | ரூ. 31 கோடி |
குளங்கள் மேம்பாடு | ரூ. 5 கோடி |
பூங்காக்கள் | ரூ. 21 லட்சம் |
திட கால்வாய்கள் | ரூ. 12 கோடி |
காலை சிற்றுண்டி திட்டத்திற்கு சமையல் கூடம் | ரூ. 25 லட்சம் |
பள்ளி கட்டிட பராமரிப்பு | ரூ. 69 லட்சம் |
இதர பணிகள் | ரூ. 35 லட்சம் |
மொத்தம் | ரூ. 66 கோடி |
இதையும் படிங்க: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் துவக்கம்!
ராஜன் செல்லப்பா கேள்வி: மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளில், பாதாள சாக்கடைத் திட்டம் பல்வேறு வழிகளில் நிறைவேற்றப்படும் என கடந்த மூன்று சட்டமன்ற கூட்டத்தொடரில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அந்த பாதாள சாக்கடை பணிகள் திருப்பரங்குன்றத்தில் நடைபெறவில்லை. சட்டமன்றத்தில் உறுதியளித்ததை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் கே.என்.நேரு பதில்: “பாதாள சாக்கடை அமைக்கும் பணிக்காக அரசாணை வெளியிடப்பட்டு, ஒப்பந்தம் வெளியிடப்பட்டுள்ளது. ஒப்பந்த நிறுவனத்துடன் தொகையை குறைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் திட்டம் நிறைவேற்றப்படும்” என்றார்.
எம்.எல்.ஏ கிரி கேள்வி: செங்கம் பேரூராட்சியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்படுமா? என செங்கம் சட்டமன்ற உறுப்பினர் கிரி கேள்வி எழுப்பினார்.
மதுரையில் பாதாள சாக்கடை திட்டம் மற்றும் சாலைகள் சீரமைப்பு எப்போது முடியும்? pic.twitter.com/spBujJ4UgR
— V V Rajan Chellappa MLA (@rajanchellppavv) December 9, 2024
அமைச்சர் பதில்: “மழைநீர் வடிகால்வாய்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் நிதி ஒதுக்கி கழிவுநீர் கால்வாய்கள் அமைக்க முக்கியத்துவம் அளிக்கப்படும். மதுரை புறநகர் பகுதியில் ரூ. 2 ஆயிரம் கோடியிலும், மதுரை மாநகர் பகுதியில் ரூ.1,500 கோடியிலும் பாதாள சாக்கடை மற்றும் கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. மதுரையில் சாலைகளுக்கு தனியாக நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
விசிக எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் கேள்வி: நாகப்பட்டினம் நகராட்சி உட்கட்டமைப்பு மிகவும் பழுதாகியுள்ளது. தெருக்களில் வழிந்தோடும் கழிவுநீர், குடிநீரில் கலக்கும் கழிவுநீர், சேதமடைந்த சாலைகள் நகராட்சியின் அடையாளமாக மாறியுள்ளது என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் பதில்: “கடந்த ஆண்டு சாலைகள் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கபட்டுள்ளது. நாகப்பட்டினம் நகராட்சிக்கு கூடுதல் கவனம் செலுத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். ஒவ்வொரு பணியும் நாகப்பட்டினம் நகராட்சிக்கு நிச்சயம் செய்வோம்” என்று பதில் அளித்துள்ளார்.