சென்னை: கடந்த திமுக ஆட்சி காலத்தில் 2006ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் 44 லட்சத்து 59 ஆயிரத்து 67 ரூபாய் மதிப்பிலான சொத்துகளை வருமானத்திற்கு அதிகமாக சோ்த்ததாக அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அவரது மனைவி ஆதிலட்சுமி, நண்பர் சண்முகமூா்த்தி ஆகியோா் மீது கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 20 தேதி விருதுநகர் மாவட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனா்.
இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், வழக்குகளிலிருந்து அமைச்சர் உட்பட அனைவரையும் விடுவித்து உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் வகையில் தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரணை நடத்தினார்.
இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில், 'புதிய ஆவணங்கள் இல்லாதபோது வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்திக்கு உரிமை உள்ளது. புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கினாலும் தொடர் விசாரணையில் தான் ஒருவர் குற்றவாளியா, இல்லையா? என்பது தெரியவரும். விசாரணையில் குற்றம்சாட்டப்பட்டவர் மீது ஆதாரம் இல்லை என தெரியவந்தால் அவர்களை நீதிமன்றம் விடுவிக்கலாம்.
புகார் அளிக்கப்பட்டதற்காக ஒருவரை குற்றவாளியாக கருதி விசாரணை நடத்தக் கூடாது. புகாரின் உண்மைத்தன்மை குறித்து விசாரணை அமைப்பு தனது விசாரணையை நடத்தி முடித்துள்ளது. விசாரணை அறிக்கை அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது' என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு இன்று (ஜூன் 19) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எந்த அடிப்படையில் அமைச்சர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் என்பதற்கான காரணங்களை நீதிமன்றம் அறிய விரும்புகிறது என்றும், விடுவிப்பதற்கான காரணம் சரியாக இருந்தால் விடுதலை செய்வதை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாகவும் நீதிபதி தெரிவித்தார்.
அமைச்சர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'புதிய விசாரணை அதிகாரியிடம் வழங்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்ததால் மேற்கொண்டு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முதலில் விசாரணை செய்த அதிகாரி அதை கவனிக்க தவறிவிட்டார். விசாரணை அதிகாரியின் முடிவை நீதிமன்றம் ஏற்க எந்த தடையும் இல்லை. ஒரே வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்க வாய்ப்புள்ளது. நீதிமன்றத்தில் என்ன ஆவணங்கள் தாக்கல் செய்யப்படுகிறதோ அதனடிப்படையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இறுதி அறிக்கையின் அடிப்படையில் நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது' என தெரிவித்தார்.
அதற்கு, அரசியல் தலைவர்கள் வழக்கில் மட்டும் ஏன் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டது? அனைத்து வழக்குகளிலும் இதே நடைமுறை பின்பற்றப்படுமா? என்பது கேள்விக்குறியாக உள்ளதாக நீதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்து அமைச்சர் தரப்பில், எஸ்.பி தலைமையிலான விசாரணை அமைப்பு 132 சாட்சிகளிடம் விசாரணை செய்தது. 60 புதிய சாட்சிகள் வழக்கில் சேர்க்கப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதி நாளைக்கு (ஜூன் 20) ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களை வெளியேற்றக்கூடாது: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு - Manjolai Tea estate workers