தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் மல்லிப்பட்டினம் அரசு மேல்நிலை பள்ளியில் தற்காலிக தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ரமணி (26) மதன் (30) என்பவரால் நேற்று (நவ.20) பள்ளி வளாகத்திலேயே கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, மதனை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், தஞ்சாவூரில் பள்ளி ஆசிரியை கொல்லப்பட்ட சம்பவம் தெரிந்தவுடன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, அது குறித்து விசாரணை செய்ததுடன், சென்னையில் இருந்து நேரடியாக தஞ்சாவூர் சென்று ஆசிரியை ரமணியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி ரமணியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.
மேலும், ''இது போன்ற சம்பவம் பள்ளிக்குள் நடந்திருக்கக் கூடாது. ஆசிரியர் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து முதலமைச்சர் என்னிடம் கேட்டறிந்தார். சம்பந்தப்பட்ட நபர் உடனடியாக கைது செய்யப்பட்டிருக்கிறார். ஆசிரியர்கள் மீதான வன்முறையை துளியும் சகித்துக் கொள்ள முடியாது. தாக்குதலை நடத்தியவர் மீது கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மேலாண்மைக்குழுவின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியையின் மறைவு உள்ளபடியே வேதனைக்குள்ளான ஒன்று" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஆசிரியை கொலை சம்பவம்.. அரசுக்கு திருமாவளவன் எச்சரிக்கை!
இதுமட்டும் அல்லாது, "கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்துக்கு அரசு என்றும் துணை நிற்கும். ஆசிரியர்கள் பணி பாதுகாப்புக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். பள்ளி வளாகத்தில் சிசிடிவி கேமரா பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததோடு, குற்றவாளிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் வாதாடாமல் இருக்க வேண்டும்" எனவும் வேண்டுகோளை விடுத்துள்ளார்.
இதற்கிடையில், ஆசிரியை ரமணியின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்ததுடன், 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கியுள்ளார். மேலும், குற்றவாளிக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் அறிவிப்பின்படி, இன்று (நவ.21) பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கொலையான ஆசிரியை ரமணியின் தந்தை முத்து மற்றும் தாயார் முத்துராணி ஆகியோரிடம் நிதி உதவி ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். அப்போது, கொலை செய்யப்பட்ட ஆசிரியை குடும்பத்தின் சார்பில் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என அமைச்சர் கோவி.செழியனிடம் மனு அளித்துள்ளனர்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்