விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி திமுகவின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த நா.புகழேந்தி கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், ஜூலை 10ஆம் தேதி விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில், திமுக சார்பில் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடும் அன்னியூர் சிவாவை ஆதரித்து அமைச்சர்கள் விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு மற்றும் தொழில்துறை அமைச்சர் சி.வி.கணேசன், அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் விக்கிரவாண்டி நகர்ப் பகுதியில் நேற்று (ஜூலை 1) வாக்கு சேகரித்தனர்.
அப்போது, நகர்ப் பகுதி மக்கள் வசிக்கக்கூடிய மேட்டுத்தெரு, போலீஸ் ஸ்டேஷன் தெரு ஆகிய பகுதிகளில் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் சி.வி.கணேசன் ஆகியோர் நடந்தே சென்று வாக்காளர்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தனர். மேலும், வாக்கு சேகரிப்பின் போது அமைச்சர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து வாக்கு சேகரித்து பேசிய அமைச்சர் சி.வி.கணேசன், "தமிழ்நாட்டை ஆளுகின்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த நல்ல பல திட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக திமுகவிற்கு தான் மக்கள் வாக்களிப்போம்" என்று வாக்காளர்கள் தெரிவிப்பதாக கூறினார்.
இதேபோல, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முண்டியம்பாக்கம் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேசும்போது, "மகளிர் உரிமைத்தொகை ஒரு மகத்தான திட்டம் முதலமைச்சர் வழங்கிய திட்டங்களில் மிக முக்கியமான திட்டமாக இது கருதப்படும்.
அதேபோன்று பள்ளி செல்லும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி திட்டம் பொதுமக்கள் பெற்றோர்கள் இடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதுபோல, பல திட்டங்கள்தான் திமுக ஆட்சியின் சாட்சியாக இருந்து வருகிறது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: புனித ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு 25 ஆயிரம் இணை மானியம்!- அமைச்சர் செஞ்சி மஸ்தான்