வேலூர்: வேலூரில் ரூ.7.63 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆகியோர் இன்று (பிப்.9) திறந்து வைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "வேலூரில் தமிழக அரசு சார்பில் 7.63 கோடி மதிப்பீட்டில் 7 அறைகள் கொண்ட சுற்றுலா மாளிகை கட்டடம் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த மாளிகையில் நவீன வசதிகளான லிப்ட் ஆகியவை அடங்கி உள்ளன. இந்த மாளிகை 8 மாதத்தில் கட்டப்பட்டுள்ளது. குறுகிய காலத்தில் கட்டப்பட்டதே இதன் சிறப்பாகும். மேலும், என்னுடைய பழைய சொந்த மாவட்டமான வேலூரில், சுற்றுலா மாளிகை அமைந்தது எனக்கு மிக மகிழ்ச்சியாக உள்ளது. தமிழகத்தில் அரசுக்குச் சொந்தமாக உள்ள பழைய கட்டடங்களைப் புதுப்பித்து கட்டுவதற்காக, கடந்த ஆண்டு தமிழக முதலமைச்சரால் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்மூலம் பல கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
விரிஞ்சிபுரம் மேம்பாலம்: விரிஞ்சிபுரம் மேம்பாலத் திட்டத்திற்கு மத்திய அரசின் நிதி எதிர்பார்த்து காத்திருப்பதால், நிதி வந்ததும் விரைவில் ஆரம்பிக்கப்படும்.
காட்பாடி ரயில்வே மேம்பாலம்: காட்பாடியில் கூடுதல் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான மறு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சிஎம்சி மருத்துவமனைப் பகுதியில் மேம்பாலம்: சிஎம்சி மருத்துவமனை அருகில் அரசுக்குச் சொந்தமான இடம் இருப்பதாக நான் அறிகிறேன் என இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்தேன். ஆதலால், நாளை காலை அந்த இடத்திற்கு டிஆர்ஓ சென்று அளவீடுவார். அதன்படி, சுரங்கப்பாதை அமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.
முசிவாய்ஸ் மேம்பாலம்: வேலூர் மாவட்டத்தில் நெரிசல் அதிகமாக இருக்கக்கூடிய இடங்களில் ஆய்வு செய்து மேம்பாலம் அமைக்கப்படும்.
ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம்: தமிழகத்தில் ரயில்வே கிராசிங்கில் மேம்பாலங்கள் அமைக்க தமிழக அரசு கட்டாயம் முக்கியத்துவம் அளிக்கும்" என்றார்.
இதையும் படிங்க: ஏலக்காய் விலை கடும் வீழ்ச்சி.. சோகத்தில் போடிநாயக்கனூர் விவசாயிகள்!