சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவை பல்வேறு துறைகள் மீதான மானிய கோரிக்கை குறித்த விவாதம் ஜூன் 20 முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு, நாடு முழுவதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இன்றைய கூட்டத்தொடரில் மதுவிலக்கு அமலாக்க திருத்தச் சட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சட்டமன்ற கூட்டத்தொடரில் வினாக்கள் - விடை நேரம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளுக்கு தேவையான கோரிக்கைகளை கேட்டு வருகின்றனர். அதற்கு அந்தந்த துறை அமைச்சர்களும் பதிலளித்து வருகின்றனர்.
தமிழ்நாட்டில் மேலும் 4 நகரங்களில் புறவழிச்சாலை: புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் தொடர்பாக மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, "ஜவ்வாது மலைக்கு போளூர் வழியாக புறவழிச்சாலை அமைப்பது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் நிறைவு பெற்றவுடன், முதலமைச்சரின் அனுமதி பெற்று நிதி ஒதுக்கீடு செய்து, இந்த ஆண்டில் இச்சாலைப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
மணப்பாறை பகுதியில் கனரக வாகனங்கள் அதிகமாக செல்வதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதனால், புறவழிச்சாலை அமைத்து தருவாரா என்ற மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது கேள்விக்கு, "தமிழ்நாட்டில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. அதன் காரணத்தினால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் புறவழிச்சாலை அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனால் கடந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் 4 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. இந்த ஆண்டும் அதேபோல் 4 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, மணப்பாறை பகுதியிலும் சாலை அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. அதனால், வருங்காலத்தில் அரசின் நிதி நிலைக்கு ஏற்ப கட்டாயம் செய்யப்படும்" எனத் தெரிவித்தார்.
ஆணையூர் கண்மாய்க்கு ரூ.3.12 கோடி மதிப்பில் புதிய மடை: உசிலம்பட்டி தொகுதி 58 கிராம கால்வாய்க்கு புதிய மடை அமைக்க அரசு முன்வருமா என உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் கேட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் துரைமுருகன், "உசிலம்பட்டி தொகுதியில் 58 கிராம கால்வாய் திட்டத்தின் கீழ் ஆணையூர் கண்மாய்க்கு ரூ.3.12 கோடி மதிப்பில் புதிய மடை அமைக்க நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஒப்பந்தப்புள்ளி வெளியிடும் பணிகள் தொடங்கவுள்ளது. விரைவில் ஆணையூர் கண்மாய்க்கு புதிய மடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
தி.நகர் பகுதியில் குடிநீருடன் கலக்கும் கழிவுநீர்: அதைத் தொடர்ந்து, தி.நகர் தொகுதியில் 141 வார்டு முத்து ரங்கன் சாலையில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? என்ற தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர் கருணாநிதி கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கே.என்.நேரு, "தி.நகர் தொகுதியில் 141 வார்டு முத்து ரங்கன் சாலையில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்குவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையில் தயார் செய்யப்பட்டு வருகிறது. இந்த பணி முடிந்தவுடன் இப்பகுதியில் 24 மணி நேரமும் குடிநீர் வழங்க வழிவகை செய்யப்படும்.
மேலும், தி.நகர் பகுதியில் கழிவுநீருடன் குடிநீர் கலப்பது தொடர்பாக அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பார்கள். மேலும் 2 நாட்களில் அதை சரி செய்து தரப்படும். மேலும், பழைய குழாய்கள் இருந்தால் அவற்றை மாற்றி சுத்தமான குடிநீர் வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று பதிலளித்தார்.
இதையும் படிங்க: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள்