திருப்பத்தூர்: திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியில், இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையை அடுத்துள்ள கோடியூர் பகுதியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு பங்கேற்று, திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை அறிமுகம் செய்து வைத்தார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் எ.வ.வேலு, "ஜனநாயகத்திற்கு ஆபத்து வந்துள்ளது, இந்த தேர்தல் யார் வரக்கூடாது என்பதற்கான தேர்தல். இது பாசிசத்திற்கும், ஜனநாயகத்திற்கும் இடையே நடைபெறும் தேர்தல். பாசிசம் என்பது பணக்காரன் ஆட்சி செய்வது. அவர்கள் சொல்வது தான் நாட்டில் நடக்கும். ஆனால், நாம் ஜனநாயக காற்றை சுவாசிப்பவர்கள்.
தமிழ்நாட்டில் நடைபெறும் சமூகநீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இந்தியாவில் மற்ற மாநிலங்களில் சமூகநீதி கிடையாது. இந்தியாவில் உயர்ந்த பதவியில் இருக்கும் குடியரசுத் தலைவர் நாடாளுமன்றத்தை திறக்கவில்லை. ராமர் கோயிலுக்கும் செல்லவில்லை. இது தான் மனுநீதி.
ஆனால், ஆதி திராவிடர்களும் கோயில் அறங்காவலர் குழுவில் இருக்கலாம் என்று கூறியவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி. இதுதான் சமூகநீதி” என்றும் பேசினார். மேலும், “பாஜக இயக்கம் எந்த காலத்திலும் தமிழ்நாட்டில் கால் ஊன்ற முடியாது. அதிமுக ஒரு வீணாப்போன கட்சி, ஈபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தனித்தனியாக கடைகளைப் போட்டுக்கொண்டு 'எனக்கு ஓட்டு போடுங்கள், எனக்கு ஓட்டுப் போடுங்கள்' என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.
விவசாயிகள் விரும்பாத சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது, எடப்பாடி வகையறாதான். 10 ஆண்டுகால ஆட்சி வெறும் ட்ரைலர் என்று கூறுகிறார். இந்த ட்ரைலரிலேயே இதுவரையில் இல்லாத அளவு விலைவாசி ஏறியுள்ளது. இன்னும் முழுப்படம் பார்த்தால், நாடு தாங்காது. கேஸ் விலை ரூ.2,700 ஆக உயர்ந்து விடும்.
மோடி குஜராத் முதலமைச்சராக இருக்கும் போது ஒரு பேச்சு பேசுகிறார், பிரதமரான உடன் ஒரு பேச்சு பேசுகிறார். குஜராத்தில் ஜிஎஸ்டியை விடமாட்டேன் என்று கூறி, தற்போது நாட்டில் அனைத்து பொருட்களுக்கும் ஜிஎஸ்டியை விதித்துள்ளார். அவர் மூன்றாவது முறை வந்தால், ஜிஎஸ்டி 50 சதவீதம் ஆகிவிடும்.
மேலும், தமிழ்நாட்டில் 100 ரூபாயை வசூல் செய்து 79 ரூபாயாக திருப்பித் தருகிறார். ஆனால் பீகார், உத்தரப் பிரதேச மாநிலங்களுக்கு 200 ரூபாய், 290 ரூபாய் என வழங்குகிறார். தமிழ்நாட்டின் வரிப்பணத்தைச் சுரண்டி பீகாருக்கும், உத்தரப் பிரதேசத்திற்க்கும் கொடுக்கிறார். ஆகையால், இந்த முறை நாம் வெற்றி பெற அனைவரும் சுறுசுறுப்பாக வேலை செய்ய வேண்டும்" என திமுகவினரைக் கேட்டுக் கொண்டார்.
இதையும் படிங்க: தொடர் எதிர்ப்புகளுக்கு மத்தியில் அண்ணாமலையின் வேட்பு மனு ஏற்பு!