சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை மொத்தம் பத்து தளங்களைக் கொண்டது. இதில் தமிழக அரசின் பல்வேறு துறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கட்டிடத்தில் முதல் தளத்தில் வேளாண்மைத் துறை சார்ந்த அலுவலகம் இயங்கி வருகிறது.
அலுவலகத்தின் தரைப்பகுதியில் ஏற்பட்ட விரிசல்: அந்த அலுவலகத்தின் தரைப்பகுதியில் விரிசல் ஏற்பட்ட சதத்தை கேட்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், அங்கிருந்து உடனடியாக வெளியேறினர். முதல் தளத்தைத் தொடர்ந்து, கட்டிடத்தின் பத்து தளங்களில் இருந்த பணியாளர்களுக்கு இந்த செய்தி பரவியதை அடுத்து உடனடியாக அனைத்து பணியாளர்களும் வெளியேறினர். இதனால் அந்த பகுதி முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆய்வு மேற்கொண்ட காவலர்கள்: இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை மற்றும் பொதுப்பணித் துறையினர், சம்பந்தப்பட்ட பகுதியில் ஆய்வு செய்தனர். முதல் தளத்தின் தரையில் இருந்த டைல்ஸ்களில் ( air crack ) வெடிப்பு ஏற்பட்டுள்ளதை உறுதி செய்தனர். பின்னர் பணியாளர்கள் பதற்றம் அடைய தேவையில்லை என்றும் உள்ளே சென்று பணியாற்றலாம் என்று காவல்துறையினர் தெரிவித்ததையடுத்து மீண்டும் பணியாளர்கள் பணிக்குத் திரும்பினர்.
இதையும் படிங்க: “தமிழ்நாட்டிற்கு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்” - தவெக மாநாட்டுக்காக விஜயின் தந்தை சிறப்பு பூஜை!
அமைச்சர் எ.வ வேலு ஆய்வு: இதையடுத்து தரை வெடிப்பு ஏற்பட்ட இடத்தை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ வேலு ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் எ.வ வேலு கூறுகையில், “நாமக்கல் கவிஞர் மாளிகை 1974 கட்டப்பட்டு திறக்கப்பட்டது. இதில் தான் தலைமைச்செயலகத்தின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் முதல் தளத்தில் வேளாண்துறை உள்ளது.
கட்டிடம் உறுதியாக உள்ளது: இந்த தகவல் கிடைத்தவுடன் பொறியாளர்களை வைத்து ஆய்வு செய்தோம். கட்டிடம் உறுதியாக உள்ளதாக தெரிவித்தனர். இந்த கட்டிடத்தின் தரைகளை 14 ஆண்டுகளுக்கு முன்னர் சிறிய டைல்ஸ்கள் போடப்பட்டது. அப்போதெல்லாம் பெரிய டைல்ஸ்கள் கிடையாது.
பழைய டைல்ஸ்கள் நாளடைவில் வெடிப்பு விழுந்துவிடும். இந்த வெடிப்புயை தான் கட்டிடத்தில் விரிசல் விழுந்துவிட்டதோ என்ற அச்சத்தில் அலுவலகத்தில் வெளியேறி விட்டார்கள். கட்டிடம் உறுதி தன்மையோடு இருக்கிறது. இருந்தாலும் வெடிப்பு விழுந்த இடத்தில் சிறிய டைல்ஸ்கள் எல்லாம் அகற்றிவிட்டு பெரிய டைல்ஸ்கள் போட வேண்டும் என கூறியுள்ளோம். எனவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை அரசு பணியாளர்கள் அலுவலகம் திரும்பிவிட்டனர்” என்றார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்