காஞ்சிபுரம் : திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சியின் பவள விழா கொண்டாட்டங்கள் சமீபத்தில் நடைபெற்றன. அந்தவகையில், கடந்த செப் 17ம் தேதி முப்பெரும் விழாவோடு சேர்த்து திமுக பவள விழாவும் கொண்டாடப்பட்டது.
மேலும், காஞ்சிபுரத்தில் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்கும் திமுக பவள விழா பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், திமுக நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களும் சிறப்புரையாற்றினர்.
இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் துரைமுருகன், "என் வகுப்பறையில் கூட 3 மணி நேரம் அமர்ந்திருக்கவில்லை ஆனால், இன்று 4 மணி நேரம் அமர்ந்திருந்தேன். திராவிடம் என்ற வார்த்தை சொன்னவர் மண்ணில் பவள விழா நடைபெறுகிறது. திராவிடம் என்று பேசினாலே சிலருக்கு வயிறு எரிகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஹரப்பா, மொகஞ்சதாரோ என்ற இரண்டு நகரம் இருந்தது. அவை இன்று இருக்கும் நாகரீகத்தை விட மேன்மையான நாகரீகமாக இருந்தது.
இந்த நாகரீகத்தை விரட்டிவிட்டார்கள். அவர்கள் தான் திராவிடர்கள் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றியவர்கள் திராவிடர்கள். பழமை வாய்ந்த உலக வரலாற்று ஆசிரியர்கள் உலகின் சிறந்த நாகரீகம் திராவிட நாகரீகம் தான் என குறிப்பிட்டுள்ளனர். ஒரு காலத்தில் திராவிட நாடு என்று சொன்ன போது சண்டைக்கு வந்தவர்கள் இங்கு இருக்கிறார்கள்.
ஆனால், திராவிட மாடல் என்று சொல்லும் போது தளபதியே என்று கொண்டாடுகிறார்கள். இந்தியா கூட்டாட்சி தத்துவம் கொண்ட நாடு. நாம் வரி செலுத்துகிறோம். அந்த வரி மத்திய அரசிடம் இருக்கிறது. மு.க.ஸ்டாலின் போன்ற நூற்றாண்டில் பிறந்தது மகிழ்ச்சியாக உள்ளது" என தெரிவித்தார்.
பின்னர் பேசிய முத்தரசன், "தமிழகத்தில் தேர்தலுக்கான, தொகுதி பங்கீட்டுக்காக கூட்டணி அமையவில்லை. கொள்கைக்கான கூட்டணியாக அமைந்துள்ளது. திமுக கூட்டணி வரும் தேர்தல்களிலும் தொடரும். வெற்றியும் பெறுவோம். தமிழ்நாடு முற்போக்கு மாநிலம். பழைய பஞ்சாக்கத்தையும், மூடநம்பிக்கையும் திணிக்க முடியாது. இதனால் மூடநம்பிக்கைக்கு எதிரான ஒரு துறையை உறுவாக்க வேண்டும்" என தெரிவித்தார்.
திராவிடம் என்று சொன்னாலே இன்று சிலருக்கு எரிச்சல் ஏற்படுகிறது. இது எதோ இடையில் உருவான வார்த்தை அல்ல. 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நாகரிகம் திராவிட நாகரிகம் ஆகும்
— DMK IT WING (@DMKITwing) September 28, 2024
- கழகப் பொதுச்செயலாளர், மாண்புமிகு நீர்வளத்துறை அமைச்சர் திரு @katpadidmk அவர்கள்#DMK75 pic.twitter.com/8EnNOhZpfD
பின்னர் பேசிய கே.பாலகிருஷ்ணன், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்கட்சிகளை ஒன்றிணைத்து தனிப்பெரும்பான்மை ஆட்சியை கூட்டணி ஆட்சியாக மாற்றி, பாஜக என்ற வெறி கொண்ட மிருகத்திற்கு வேலி போட்டது இந்தியா கூட்டணி. இந்தியா கூட்டணிக்கு விதை போட்டவர் மு.க.ஸ்டாலின். இந்தியாவையே சிற்கோளம் ஆக்கிவிடுமோ என்ற கொடுங்கோல் ஆட்சி நடைபெற்று வருகிறது.
பேராபத்து நிறைந்துள்ள நிலையில் பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் வரையில் கூட்டணி தொடர வேண்டும். அதற்கான முன்னெடுப்பை மு.க.ஸ்டாலின் மேற்கொள்ள வேண்டும். இதற்காக இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள், மதசார்பற்ற கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைத்தார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்