வேலூர்: தமிழ்நாட்டில் ஆறுகளில் தண்ணீர் வீணாக செல்வதை தடுக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேவையான அளவு தடுப்பணைகள் கட்டப்படும் என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
குடியாத்தம் தழையாத்தம் மற்றும் குடியாத்தம் நகரத்தை இணைக்கும் வகையில், கவுண்டண்யா மகாநதி ஆற்றின் குறுக்கே ரூ.8.41 கோடி மதிப்பீட்டில் தரைப்பாலம் அமைக்கும் பணிக்கு நேற்று (டிச.05) வியாழக்கிழமை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அடிக்கல் நாட்டியுள்ளார்.
பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது, “காமராஜர் பாலம் அருகே இருந்த அரசு மதுபான கடையை அகற்ற மிகவும் சிரமமாக இருந்தது. அதனை அகற்றிய மாவட்ட ஆட்சியருக்கு நன்றி. காமராஜர் பாலம் அருகே இருந்த அண்ணா, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதாவின் சிலைகளை, சாலை விரிவுபடுத்தும் பணிக்காக மாற்றி அமைக்க அதிமுக நண்பர்களிடம் கேட்டதற்கு உடனடியாக ஒப்புக்கொண்டனர்.
கவுண்டன்ய மகாநதி ஆற்றின் கரையோரம் 1400க்கும் மேற்பட்ட வீடுகள் நீதிமன்ற உத்தரவின் பெயரில் அகற்றப்பட்டது. அவ்வாறு அகற்றப்பட்ட வீட்டின் உரிமையாளர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். முன்னாள் முதலமைச்சர் கலைஞர், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிட்டார்.
ஆனால், இலவச மின்சாரத்தை ரத்து செய்யும் திட்டத்தை ஜெயலலிதா கொண்டுவந்தார். சட்டப்பேரவையில் நான் பேசியதை பார்த்து ஜெயலலிதாவே மிரண்டு போனார். ஜெயலலிதா எப்போதும் என்னிடம் ஆங்கிலத்தில் பேசுவார். அவர் என்னிடம் வந்து நல்லவேளை நீங்கள் சினிமாவிற்கு வரவில்லை. சினிமாவுக்கு வந்திருந்தால் சிவாஜி இருந்திருக்க மாட்டார்” இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தகுதி இல்லையா?.. தேர்வுக்குப்பின் விதிகளை மாற்றிய டிஎன்பிஎஸ்சி - 27 ஆயிரம் பட்டதாரிகளின் நிலை என்ன?
அதனைத்தொடர்ந்து, வேலூர் காட்பாடியில் புதிய காவல் நிலையத்தை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்துள்ளார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் கூறியதாவது, “ தமிழ்நாட்டில் அணைகள் கட்டப்பட வேண்டிய இடங்களில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. குறிப்பாக பெரிய ஆற்றுப்பகுதிகளில் அணைகள் கட்டப்பட்டுள்ளது. இனிவரும் காலங்களில் தேடி தான் அணைகளை கட்ட வேண்டும்.
ஆனால், ஆறுகளில் மழைக்காலங்களில் பெருக்கெடுத்து ஓடுகிற வெள்ளம் இரண்டு மூன்று நாட்களில் வடிந்து விடுகிறது. இதனால் எந்த பயனும் இல்லை. ஆங்காங்க சிறிய சிறிய ஆணைகளை கட்டினால், நான்கு அல்லது ஐந்து அடிக்கு தண்ணீர் தேங்கி நிற்கும். இதன் காரணமாக விவசாய கிணறுகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் தேங்கி விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும். குறிப்பாக, குகைநல்லூர் அருகே கட்டப்பட்டுள்ள தடுப்பணையால் சுற்றுவட்டார பகுதிகளில் தற்பொழுது தண்ணீர் தேங்கியுள்ளது.
ஆகவே, ஆறுகளில் வீணாகச் செல்லும் தண்ணீரை இனிவரும் காலங்களில் தேக்கி வைக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது. வெள்ள பாதிப்புகளை கணக்கெடுக்க ஐந்துக்கும் மேற்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகளை கொண்டு கணக்கெடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தற்காலிகமாகவும், நிரந்தரமாகவும் சரி செய்ய நீர்வளத்துறை சார்பில் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்” என்றார். வெள்ளம் பாதிப்புக்கான நிவாரணத் தொகை குறைவாக இருப்பதாக எதிர்கட்சிகள் கூறுவது குறித்து கேள்வி எழுப்பியதற்கு, “இது குறித்து நிதி அமைச்சரை தான் நீங்கள் கேட்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.