வேலூர்: வேலூர் மாவட்டம் காட்பாடி காங்கேயநல்லூரில் முருக கிருபானந்த வாரியார் சுவாமிகளின் 31ஆம் ஆண்டு குருபூஜை நாளை நடைபெறுகிறது. அதனையொட்டி இன்று அவரது உருவ சிலைக்கு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “வடகிழக்கு பருவமழையொட்டி தமிழகத்தில் தண்ணீர் தேங்காதவாறு பல்வேறு இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதன் அடிப்படையில் சில இடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி வருகிறோம்.
பல இடங்களில் நீதிமன்றத்திற்கு சென்று விடுகின்றனர். தமிழக அரசின் நிலைப்பாடும், நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை கண்டிப்பாக அகற்றப்பட வேண்டும் என்பதே. சில இடங்களில் வீடுகளை கட்டி உள்ளவர்களுக்கு மாற்று இடம் வழங்காமல் ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியாது. அது நியாயமும் இல்லை. அவர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.
இதையும் படிங்க: அணுக்கழிவுகள் சேகரிப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? - 2 மாதம் கெடு விதித்த கமிட்டி!
ஏரிகளில் வண்டல் மண் எடுக்க தொடர்ந்து அனுமதி வழங்கப்பட்டு தான் வருகிறது. சில இடங்களில் முறைகேடு செய்பவர்கள் செய்கிறார்கள். சில இடங்களில் நியாயமாக நடப்பவர்களும் இருக்கிறார்கள். காட்பாடி காங்கேயநல்லூர் சாலை அமைக்கும் பணிக்காக டெண்டர் விடப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கும்” என்று தெரிவித்துள்ளார்.
திமுக சரிந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “எதிர்க்கட்சியினர் அப்படிதான் கூறி வருவார்கள். அவர் எதிர்க்கட்சித் தலைவராக அவர் செயல்படுகிறாரா என்பதை அவரே பொதுமக்களுக்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறினார்.
ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்