வேலூர்: குடியாத்தம் கவுண்டன்ய மகாநதியின் குறுக்கே ரூ.43 கோடியே 89 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட தரைப்பாலத்தை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் திறந்து வைத்தார். இந்த விழாவில் பேசிய அமைச்சர், "நான் சிறிய வயதாக இருக்கும் போது சான்றிதழ் வாங்க குடியாத்தம் தாலுகா அலுவலகத்திற்கு வருவேன். இரவு முழுவதும் படுத்திருந்து காலையில் வாங்கி செல்வேன்.
காட்பாடியில் அப்போது தாலுகா அலுவலகம் கிடையாது. அதனால் தான் நான் சட்டமன்ற உறுப்பினராக வந்த போது காட்பாடியில் தாலுகா அலுவலகம் கொண்டு வந்தேன். 100 கோடி ரூபாய் மதிப்பு மோர்தானா அணை கட்டப்பட்டது முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி தான் அதனை திறந்து வைத்தார்.
அந்த இடத்தில் தற்போது சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். அதன் காரணமாக அதற்கான நிதி ஒதுக்கீடு செய்து குழந்தைகள் விளையாட்டு பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டு வந்து சிறிய சுற்றுலா தளமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அதேபோல் நெல்லூர் பேட்டை ஏரியில் படகு விடுவதற்கு கோரிக்கை வைத்துள்ளனர். ஆகவே அதனையும் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: "கொங்கு மக்களுக்கு நேர்ந்த அவமானம்" - பொங்கி எழுந்த கோவை எம்.பி கணபதி ராஜ்குமார்
மேலும், அதன் தொடர்ச்சியாக பேசிய அவர், "தமிழக அரசு மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செய்து வருகிறது. இந்த அரசு ஆடாமல் அசையாமல் ஒரு இயந்திரம் போல செயல்பட்டு வருகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தடுமாறாமல் தான் எடுக்கும் நடவடிக்கைகளில் வேகம் காட்டாமல் நேரம் வரும்போது நடக்க வேண்டிய செயல்களை சரியாக செய்து வருகிறார்.
திமுகவின் பொது செயலாளராக பேரறிஞர் அண்ணா, இரா.நெடுஞ்செழியன், பேராசிரியர் க.அன்பழகன், அதற்கு அடுத்ததாக ஸ்டாலின் என்னை அமர வைத்துள்ளார். அது ஒரு சாதாரண பதவியல்ல. நான் ஒரு சாதாரண விவசாய குடும்பத்தில் பிறந்தவன். கட்சியின் மீது அதிக ஈடுபாட்டுடன் பணியாற்றினேன். என்னுடைய பணியில் ஆடாமல் அசையாமல் உழைத்தேன். அதனால் தான் ஸ்டாலின் எனக்கு அந்தப் பதவியை வழங்கியுள்ளார்.
75 ஆண்டுகால திமுக வரலாற்றில் பவள விழா நடைபெற உள்ளது. அனைத்து வீடுகளிலும் திமுகவின் கொடியை ஏற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். அனைத்து வீடுகளிலும் திமுகவின் கொடியை ஏற்ற வேண்டும். தற்போது திறக்கப்பட்டுள்ள இந்த பாலம் இனி மு.க.ஸ்டாலின் பாலம் என அழைக்கப்படும்" என்று தெரிவித்தார்.