வேலூர்: வேலூர் மாவட்டம், காட்பாடி அடுத்த வள்ளிமலையில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமையில் நடந்தது. இதில் நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இவ்விழாவில் காட்பாடி ஒன்றிய குழுத் தலைவர் வேல்முருகன், வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைமுருகன், “நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் மீண்டும் தொடர்கிறது. சில காலங்கள் இடையில் மந்தமாக இருந்தது. மீண்டும் வேகமாக அப்பணிகள் ஆரம்பிக்கப்படும். மத்திய பட்ஜெட்டில் அந்நிய நிறுவனங்களுக்கு வரி விகிதம் குறைவு தொடர்பான கேள்விக்கு, மத்திய பட்ஜெட் குறித்து தெரியவில்லை எனவும், மத்திய பட்ஜெட்டில் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுப்போம் என மத்திய நிதி அமைச்சர் அறிவித்தது தொடர்பான கேள்விக்கு, யார் வேண்டுமானால் அறிவிக்கலாம், நான் கூட அறிவிப்பேன் என பதிலளித்தார்.
முன்னதாக, பட்ஜெட் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், மத்திய அரசு நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கென எந்தவொரு புதிய ரயில் திட்டங்களோ, நெடுஞ்சாலைத் திட்டங்களோ இடம்பெறவில்லை என்பது மிகுந்த ஏமாற்றத்தைத் தருகிறது எனவும், தமிழ்நாட்டின் நலன் முழுமையாக வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட வேண்டும் என்பது போல் அமைந்துள்ள நிதிநிலை அறிக்கை இது. தமிழக மக்கள் இவ்வாறு வஞ்சிக்கப்படுவது இந்திய நாட்டின் கூட்டாண்மை தத்துவத்திற்கு எதிரானது என தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
அதேபோல், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், மத்தியில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த நிதிநிலை அறிக்கை தேசத்திற்கான நிதிநிலை அறிக்கையா அல்லது ஆந்திரா, பீகாருக்குமான நிதிநிலை அறிக்கையா எனவும், பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டை ஏன் வஞ்சிக்கிறார்? தமிழ்நாட்டை ஏன் ஓரம் கட்டுகிறார் எனவும் கேள்வி எழுப்பி உள்ளார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்
இதையும் படிங்க: “மத்திய நிதிநிலை அறிக்கை வெற்று காகிதம்” - செல்வப்பெருந்தகை விமர்சனம்! - Union budget 2024