சென்னை: சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் உலக குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை ஒட்டி, விழிப்புணர்வு பேரணி மற்றும் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்தையும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன் துவக்கி வைத்தார்.
முன்னதாக, குழந்தைகள் தொழிலாளர் முறை எதிர்ப்பு விழிப்புணர்வு நடை பேரணியில் பள்ளி மாணவர்களுடன் அமைச்சர் சிவி கணேசன் கலந்து கொண்டார். பின்னர் மேடையில் பேசிய அமைச்சர் சி.வெ.கணேசன், “குழந்தை தொழிலாளர்கள் எதிர்ப்பு நாள் இன்று நடத்தப்பட்டு வருகிறது. குழந்தை தொழிலாளர் முறையை அகற்ற தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்தி வருகிறது.
குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு முனைப்புடன் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குழந்தைகளை எந்த பணிகளில் சேர்த்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்.1ஆம் தேதி முதல் ஏப்.30, 2024 வரை 346 குழந்தை தொழிலாளர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, தமிழக அரசால் மறுவாழ்வு மையங்களிலும், பள்ளிகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுவரையில் 110 வழக்குகளில் ரூ.20,27,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளை தொழில்களில் ஈடுபடுத்துவர்கள் மீது ரூ.20 - 50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. அவ்வாறு பெறப்படும் அபராதத் தொகையுடன், கூடுதலாக 15 ஆயிரம் ரூபாய் அரசின் பங்களிப்பாகச் சேர்த்து குழந்தைகள் பெயரில் வரவு வைக்கப்பட்டு, 18 வயதுக்கு பின்னர் அவர்களிடம் அளிக்கப்படும்.
கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலகளவில் 16 கோடி பேர் குழந்தை தொழிலாளர்களாக உள்ளனர். அவர்களில் 6.3 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம், பீகார், ராஜஸ்தானில் தான் அதிகளவில் குழந்தை தொழிலாளர்கள் உள்ளனர்.
தமிழ்நாட்டில் தீப்பெட்டி, பட்டாசு, தோட்டத் தொழில்களில் குழந்தை தொழிலாளர்கள் இல்லை என்பதை உறுதியாக கூறுவேன். வறுமை, குடும்ப இயலாமை காரணமாகவும், குடும்பச் சூழல் காரணமாகவும் குழந்தைகள் தொழிலாளர்களாக சேர்க்கப்படுகின்றனர். வரும் 2025ஆம் ஆண்டிற்க்குள் தமிழ்நாட்டை குழந்தை தொழிலாளர்கள் இல்லாத மாநிலமாக உருவாக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: ஓராண்டாக சிறையில் செந்தில் பாலாஜி.. 2023 ஜூன் 14 முதல் 2024 ஜூன் 14 வரை வழக்கின் பாதை! - senthil balaji case