சென்னை: சென்னை அசோக் நகர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர் கடந்த 28-ஆம் தேதி ஆற்றிய சொற்பொழிவில் அறிவியலுக்கு எதிரான கருத்துக்கள் பேசிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதேபள்ளியில் இன்று(வெள்ளிக்கிழமை) 'கல்வியே சமத்துவம் மலரச் செய்யும் மிகப்பெரிய ஆயுதம்' என்ற தலைப்பில் மேல்நிலைப் வகுப்பு மாணவர்களுக்கான விழிப்புணர்வுக் கருத்தரங்கு கூட்டம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, "அசோக் நகர் பள்ளியை பொறுத்தவரை பல முன்னெடுப்புகள் பல சாதனைகளை பல வரலாறுகளை பெற்றுள்ள பள்ளி. அதையும் தாண்டி இப்படிப்பட்ட நிகழ்வு நடந்துள்ளது வேதனைக்குரியது என்று சொல்வதைக் காட்டிலும் இது கண்டிக்க கூடியது கண்டனத்திற்குரியதாக ஒரு அமைச்சராக நான் பதிவு செய்கிறேன். இந்த விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், பல சுற்றறிக்கை அனுப்பி இது போன்ற தவறுகள் நடைபெறும் பட்சத்தில் எங்கிருந்து தவறு நடந்துள்ளது என்பதை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். ஒரு ஆசிரியர் எப்படி இருக்க வேண்டும் என்று உதாரணமாக எடுத்துக் கொள்வதற்கு தமிழ் ஆசிரியர் சங்கர் உள்ளார். கண் பார்வை இல்லாத போதும் எப்படி துணிச்சலாக ஒரு கேள்வி கேட்டுள்ளார் என்பதை வியந்து பார்ப்பதாக தெரிவித்தார்.
மேலும், காணொளி மூலமாக நாங்கள் பார்த்தது எங்கள் ஆசிரியர்கள் மீது சர்வ சாதாரணமாக குற்றச்சாட்டுகளை வைத்து அந்த நபர் பேசியுள்ளார். நிச்சயமாக அந்த மகாவிஷ்ணு என்ற நபரை நான் சும்மா விடப்போவதில்லை. பள்ளிக்கல்வித்துறையின் அமைச்சராக எங்கள் ஆசிரியரை பள்ளிக்குள் வந்து கேள்வி எழுப்பி குற்றச்சாட்டியது ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் மீது நடவடிக்கை நிச்சயமாக எடுக்கப்படும். அந்த நபர் என்னுடன் புகைப்படம் எடுத்துள்ளார் என்பதற்காக நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை திராவிட மாடல் ஆட்சி என்பது கொள்கை ரீதியான ஆட்சி" எனக் கூறினார்.
போதைப்பொருள் பயன்பாடு மாணவர்களிடையே அதிகரித்துள்ளதாக ஆளுநர் கூறிய கருத்து தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அமைச்சர், "நம் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பாக எவ்வளவு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது, எத்தனை லட்சம் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது, எத்தனை லட்சம் வழக்குகள் போடப்பட்டுள்ளது , எவ்வாறு இரும்புக்கரம் கொண்டு அடக்கி உள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.
நமது பாடத்திட்டம், நமது சிஸ்டம் பற்றியும் கருத்து சொல்கிறார் அவர் இதற்கான வேலையை தொடர்ந்து செய்து வருகிறார் என்றார். அரசுப் பள்ளியை குறை சொல்வது யாராக இருந்தாலும் ஒரு பள்ளி கல்வித்துறை அமைச்சராக என்னுடைய கண்டனத்தை நான் தெரிவித்துக் கொள்கிறேன். மாநில பாடத்திட்டத்தையும் அரசு பிள்ளைகள் பற்றியும் சொல்வது என்பது எங்கள் ஆசிரியர் பெருமக்களையும் மாணவர்களையும் அவமானப்படுத்துவதற்கு சமம். இப்படி எவ்வளவோ அரசு பள்ளி மாணவர்கள் விஞ்ஞானிகளாகும் நீதிபதிகளாகவும் உள்ளனர்" என கூறினார்.
இதையும் படிங்க: "ஆன்மீக ஆபாச கருத்துகள்" - போராட்டத்தில் குதித்த எஸ்.எப்.ஐ.. யார் இந்த மகாவிஷ்ணு?