தஞ்சாவூர்: நடைபெற உள்ள நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூரில் திமுக சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்றது. இதில் திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தேர்தல் பணிமனையை திறந்து வைத்தார்.
முன்னதாக தஞ்சாவூர் மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் முரசொலி, பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு பகுதியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, "தஞ்சையை பொருத்தவரை மூன்று முனை போட்டி தான். அதாவது போட்டி என்பது துரை சந்திரசேகரன் (தஞ்சாவூர்), அண்ணாதுரை (தஞ்சை தெற்கு), பூண்டி கலைவாணன் (திருவாரூர்) ஆகியோருக்கு மத்தியில் தான்.
இந்த மூன்று பேரில் யார் அதிக சதவீதத்தின் அடிப்படையில் வாக்கு வாங்குகிறார்கள் என்பதுதான் நமக்கு மத்தியில் இருக்கும் போட்டி. அந்தவகையில், எந்த மாவட்ட செயலாளர்கள் அதிகப்படியான வாக்குகள் பெறுகிறார்களோ, அந்த மாவட்ட செயலாளருக்கு 6 பவுன் தங்க செயினை நானே போடுகிறேன்" என்று கூறினார்.
மேலும், இந்நிகழ்ச்சியில் எம்பி பழனிமாணிக்கம், சட்டமன்ற உறுப்பினர்கள், தஞ்சாவூர் நாடாளுமன்ற மக்களவை வேட்பாளர் ச.முரசொலி உட்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் அமைதியான இந்தியா அமளியான இந்தியாவாக மாறும்: நெல்லை கூட்டத்தில் முதலமைச்சர் ஆவேச பேச்சு!