திருநெல்வேலி: நெல்லை, ராதாபுரம் தாலுகா கூட்டப்புளி கிராமத்தில் தூண்டில் வளைவு அமைப்பதற்கான தொடக்க விழா சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தூண்டில் வளைவு அமைக்கும் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியதாவது, “பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஆண்டிற்கான அனைவருக்கும் கல்வி திட்டத்திற்கான நிதியில் ரூ.230 கோடியை நிறுத்தி வைத்துள்ளனர். ரூ.2,120 கோடி கேட்டிருந்த நிலையில், ரூ.1,876 கோடி மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு வழங்க வேண்டிய ரூ.2,152 கோடியில் முதல் தவணையாக ஜூன் மாதத்தில் கொடுக்க வேண்டிய ரூ.540 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 15 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க முடியாத நிலை உள்ளது. மத்திய அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிவிட்டால், அதன் பின்னர் நிதியை வழங்க நிபந்தனைகள் விதிப்பது சரியானது இல்லை.
பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டத்தின் மூலம் 14,500 புதிய பள்ளிகள் கொண்டு வர உள்ளனர். அதில் மறைமுகமான தீர்மானங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது தெரியாது. எனவே, அதனை ஏற்கவில்லை. பிரதம மந்திரி மாதிரி பள்ளிகள் திட்டம் (பி.எம்.ஸ்ரீ) குறித்து தமிழக அரசின் கல்வித்துறை சார்ந்த உயர்மட்டக் குழுவின் முடிவின் அடிப்படையில் முடிவெடுக்க முடியும். பிரதம மந்திரி மாதிரி பள்ளியில், தேசிய கல்விக் கொள்கையைக் கொண்டு வருவார்கள். ஆகவே, பிரதம மந்திரி மாதிரி பள்ளி நிதியை நாம் கேட்கவில்லை” இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில், மண்டல அளவில் ‘பெற்றோர்களை கொண்டாடுவோம்’ என்ற தலைப்பில் மாநாடு நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களை உள்ளடக்கிய 6வது மண்டல மாநாடு நெல்லை பாளையங்கோட்டையில் இன்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்தனர். பின்னர் நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது, “நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் நன்கொடையாளர்கள் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.642 கோடி நன்கொடை வழங்கியுள்ளனர்.
1959-ல் இதுபோன்று பள்ளி சீரமைப்பு மாநாடு திருச்செந்தூரில் நடைபெற்றது. அதில் ஜவர்ஹலால் நேருவே பங்கேற்றதாக வரலாறு உண்டு. 1960ல் ரூ.77 லட்சம் நன்கொடை அளித்தார்கள். அதன் மூலம் 2,032 புதிய பள்ளிகள் இந்த வட்டாரத்தில் வந்தது. படித்தால் இதை தருகிறேன் என கருணாநிதி சொன்னார். படி நான் தருகிறேன் என முதலமைச்சர் ஸ்டாலின் சொல்கிறார்.
வறுமை உள்பட எந்த ஒரு காரணத்தாலும் பிள்ளைகள் படிப்பு தடைபடக்கூடாது. அதற்காக ‘நான் முதல்வன்’ உள்பட திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. நீங்கள் பிள்ளைகளை நம்பி எங்களிடம் ஒப்படைத்து விடுங்கள். முதலமைச்சர் குழந்தைகளை பள்ளிக்கும், கல்லூரிக்கும் கையைப் பிடித்து அழைத்துச் செல்கிறார்.
முதலமைச்சர் அமெரிக்காவில் இருந்தபடி மக்களுக்கு நல்ல திட்டங்களை கொண்டு வருகிறார். 2026 தேர்தலை மனதில் நினைத்து திட்டங்களைக் கொண்டு வரவில்லை, அடுத்த தலைமுறையின் நலனைச் சிந்தித்து திட்டங்களைக் கொண்டு வருகிறார்” இவ்வாறு அவர் கூறினார்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: 380 ரூபாயில் வந்தே பாரத் ரயிலில் பயணிக்கலாம்.. எப்படி புக் செய்வது? முழு பயண விவரம்!