சேலம்: சேலம் மாநகராட்சி, மாமாங்கம் பகுதியின் அருகே உள்ள தாழம்பூ ஓடை, பாம்பன் கரடு ஆகிய பகுதிகளில் தனியாருக்குச் சொந்தமான 10க்கும் மேற்பட்ட வெள்ளைக்கல் அரைக்கும் ஆலைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த ஆலைகளின் உரிமையாளர்கள் தமிழ்நாடு வருவாய்த்துறை மற்றும் தனியாருக்குச் சொந்தமான 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் அமைந்துள்ள வெள்ளைக்கல் எனப்படும் மெக்னிசியம் கனிமம் உள்ள சுரங்கங்களில் சட்டவிரோதமாக, வெள்ளைக் கல்லை வெட்டி எடுத்து அரைத்து உர கம்பெனிகளுக்கு மூலப் பொருட்களாக அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
இந்த வெள்ளைக்கல் சுரங்கம் என்பது சுமார் 100 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது பிரிட்டிஷ் அரசு காலத்திலும் இயங்கி வந்தது. பின்னர் இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 'செயில்' நிறுவனத்தின் கீழ் இயங்கி வந்த இந்த சுரங்கத்தில், தற்போது எந்தப் பணிகளையும் மத்திய அரசு நிறுவனமான செயில் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனை, வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள மாமாங்கம், டால்மியா போர்டு, வெள்ளக்கல்பட்டி, தாழம்பூ ஓடை, பாம்பன் கரடு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கனிமவளக் கொள்ளையர்கள் இரவு பகலாகக் கைவிடப்பட்ட வெள்ளைக்கல் சுரங்கத்திலிருந்து மக்னிசியம் எனப்படும் வெள்ளைக்கல் கனிமத்தை வெட்டி எடுத்து லாரி லாரியாக கொள்ளை அடித்துச் செல்கின்றனர்.
இந்த கொள்ளை தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் வருவாய்த் துறையினரிடம் புகார் தெரிவித்தும் எந்தப் பயனும் இல்லை எனக் கூறப்படுகிறது. மேலும் புகார் எழுகிற போது, ஒரு சில நாட்களுக்கு அமைதி காக்கும் வெள்ளைக்கல் கொள்ளையர்கள் மீண்டும் தங்களது கைவரிசையைக் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஓராண்டுக்கு முன்பு இந்த வெள்ளைக்கல் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக, டால்மியா போர்டு பகுதியில் இரு கிராமத்தைச் சேர்ந்த நபர்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும், வாகனங்களுக்கு தீ வைத்து எரித்த சம்பவமும் அரங்கேறியது. அதே நேரத்தில் பல்வேறு உயிர் இழப்புகளும் இந்த வெள்ளைக்கல் சம்பவத்தில் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், தாழம்பூ ஓடை சேலம் மேற்கு தாசில்தார் கட்டுப்பாட்டிலும், பாம்பன் கரடு, ஓமலூர் தாசில்தார் கட்டுப்பாட்டிலும் வருவதால் இருதரப்பு வட்டாட்சியர்கள் தங்களது எல்லையில் இது நடைபெறவில்லை என்றும், அவ்வப்பொழுது புகார் அளிக்கும் பொதுமக்களிடம் சமாதானம் செய்து அனுப்பி வைத்து வரும் சூழலும் நிலவி வருகிறது.
இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக, அமைதி காத்த காத்திருந்த வெள்ளைக்கல் கொள்ளையர்கள் மீண்டும் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களைப் பயன்படுத்தி நூற்றுக்கு மேற்பட்ட கூலி ஆட்களை அமர்த்தி, இரவு 10 மணியிலிருந்து காலை 10 மணிக்குள் குறிப்பிட்ட நேரத்தில் டன் கணக்கில் வெள்ளைக் கற்களை வெட்டி எடுத்துக் கடத்திச் செல்வதாகத் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற நமக்குத் தகவல் உண்மை என்பது உணர முடிந்தது. வெயில் கொளுத்தும் மதிய நேரமாக இருந்தபோதிலும் 20க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் குடும்பம் குடும்பமாக வெள்ளைக்கல் வெட்டி எடுத்துச் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி வைத்திருந்தது தெரிய வந்தது.
உடனே இது தொடர்பாக சேலம் கனிமவளத்துறை இணை இயக்குநர் பன்னீர் செல்வத்திடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்த போது, "சம்பவம் குறித்து உரிய அலுவலர்களிடம் விசாரணை நடத்தப்படும். வெள்ளைக்கல் வெட்டி எடுக்கப்பட்ட சம்பவம் உண்மை எனும் பட்சத்தில் உடனடியாக அதைத் தடுக்கவும் அதில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கையும் எடுக்கப்படும்" என்று உறுதியளித்தார்.
மேலும், இதுகுறித்து மாமாங்கம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,"கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வெள்ளைக்கல் வெட்டி எடுக்கப்படும் கொள்ளைச் சம்பவம் நடைபெற்று வருகிறது. குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகிலேயே நடத்தப்படும் இந்தக் கொள்ளைச் சம்பவத்தால் பொதுமக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது. சுமார் 24 மணி நேரமும் கனரக வாகனங்கள் இங்கே உள்ள சிறிய தார்ச்சாலை வழியாகச் சென்று வருவது மேலும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.
இங்குள்ள தாழம்பூ ஓடைப் பகுதியைச் சேர்ந்த பெருமாள், வேலு, விஜய பிரசாத், கோபால், இருசப்பன், செல்லம் ஆகியோர் தங்களது வெள்ளைக்கல் அரைக்கும் ஆலையில் கடத்தப்படும் வெள்ளைக் கற்களை அரைத்து, மேட்டூர் அருகே உள்ள உரக் கம்பெனிக்கு அனுப்பி வைத்துக் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர்.
அதேபோல, பாம்பன் கரடு மனோகரன், செல்வகுமார், மணிகண்டன், ரமேஷ், ராஜா ஆகியோரும் இதேபோல தங்களுக்குச் சொந்தமான வெள்ளைக்கல் அரைக்கும் ஆலைகளை இயக்கி சட்டவிரோதமாக வெள்ளைக் கற்களைக் கடத்தி வந்து, அரைத்து மேட்டூர் மற்றும் கேரள மாநிலத்தில் உள்ள பிரபல உரக் கம்பெனிகளுக்கு மூலப் பொருட்களாக அனுப்பி வைத்து வருகின்றனர். இதனை இவர்கள் பல வருடங்களாகச் செய்து வருகின்றனர்.
அண்மையில், தமிழ்நாடு அரசு எடுத்த கடுமையான நடவடிக்கையின் காரணமாக அமைதி காத்த இந்த வெள்ளைக்கல் கொள்ளையர்கள், தற்போது மீண்டும் தலை தூக்கியுள்ளனர். எனவே உடனடியாகக் கனிமவளத்துறை நடவடிக்கை எடுத்து, எதிர்காலத்திலும் இதுபோன்று கடத்தல் நடைபெறாமல் தடுத்து, இந்த பகுதியில் உள்ள ஆயிரத்திற்கு மேற்பட்ட விவசாய நிலங்களின் நிலத்தடி நீர்மட்டம் மற்றும் குடிநீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
இதையும் படிங்க: சட்ட நடவடிக்கை பாயும்! - அதிமுக பிரமுகரின் அவதூறுக்கு த்ரிஷா காட்டமான பதிலடி