சென்னை: கடந்த அதிமுக ஆட்சியில் 2017ஆம் ஆண்டு சட்டமன்றத்துக்குள் தடை செய்யப்பட்ட குட்கா கொண்டு சென்றதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிராக சட்டப்பேரவை உரிமைக் குழு, உரிமை மீறல் நோட்டீசை அனுப்பியது.
இந்த நோட்டீசில் அடிப்படை தவறுகள் உள்ளதாகக் கூறி, அதை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், இந்த விவகாரத்தில் உரிமை மீறல் இருப்பதாக கருதினால் மீண்டும் நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவு பிறப்பித்திருந்தது. இதையடுத்து, உரிமைக் குழு, திமுக எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது.
இதை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட எம்எல்ஏக்கள் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இரண்டாவது நோட்டீசையும் ரத்து செய்து உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து முந்தைய அதிமுக ஆட்சியில், சட்டமன்ற செயலாளர் மற்றும் உரிமைக் குழு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகள், நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு முன்பு இன்று (ஜூன் 26) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு முந்தைய ஆட்சியில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற கோருவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது மட்டுமல்லாமல், நியாயமற்றதும் கூட என்று தெரிவித்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கை திரும்ப பெற அனுமதித்தால் மக்கள் என்ன நினைப்பார்கள்? இதே போன்ற கோரிக்கை அனைவரும் எழுப்பக்கூடும் என்று தெரிவித்த நீதிபதிகள், இதே போல முந்தைய ஆட்சியில் தொழிலாளர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்குகளை திரும்பப் பெறுவீர்களா? எனவும் அரசு தரப்புக்கு கேள்வி எழுப்பினர்.
இந்த நடைமுறை சரியானது அல்ல என குறிப்பிட்ட நீதிபதிகள், தாங்களும் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று கூறி, இந்த வழக்கு தொடர்பாக அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்கும்படி அறிவுறுத்தி, வழக்கின் விசாரணையை ஜூலை 2ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.