சென்னை: கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து சி.வி.சண்முகம் அவதூறாக பேசியதாக திமுக பிரமுகர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டன.
திண்டிவனம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இந்த மனுவை நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் விசாரித்தார். அப்போது, மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன் ஆஜராகி, சி.வி.சண்முகத்தின் பேச்சால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்றால் அரசு தான் புகார் அளித்திருக்க வேண்டுமெனவும், ஆனால் திமுக நிர்வாகியால் புகார் அளிக்கப்பட்டதாகவும் கூறினார்.
சி.வி.சண்முகத்தின் பேச்சு மோசமானது தான் எனவும், அவரது பேச்சை நாங்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை எனக்கூறிய நீதிபதி, ஆனால் மோதலை ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்ய முடியுமா? என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், சி.வி. சண்முகத்தின் பேச்சு அரசியலில் இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, அதன் மூலம் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்பதாலேயே, இந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக கூறினார்.
வேறு பிரிவு ஏதேனும் பொருந்தும் என்றால் அந்த பிரிவில் வழக்குப் பதிவு செய்வதாக கூறினார். இந்த நிலையில் இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
![join ETV Bharat WhatsApp Channel click here](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/12-08-2024/22183738_whats.jpg)
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: தாம்பரத்தில் மூன்று நாட்களுக்கு விரைவு ரயில்கள் நிற்காது; தெற்கு ரயில்வே அறிவிப்பு! - முழுவிவரம் இதோ! - trains will not stop at Tambaram