சென்னை: சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் பொது தீட்சிதர்களால் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதியளித்த நீதிபதிகள், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கியுள்ளனர்.
சிதம்பரம் நடராஜர் கோயில் வருவாய் கணக்கைத் தாக்கல் செய்யக் கோரி இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நீதிபதிகள் சுரேஷ் குமார் மற்றும் சவுந்தர் அடங்கிய அமர்வில் நேற்று (டிச.5) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை பொது தீட்சிதர்கள் விற்பனை செய்ததாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்து, பொது தீட்சிதர்கள் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில் பொது தீட்சிதர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "கோயில் நிலங்கள் விற்பனை செய்யப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட தீட்சிதர்களின் வாரிசுகளிடம் விசாரித்த போது, அந்த சொத்துக்கள் குறிப்பிட்ட தீட்சிதர்கள் சொந்தமாக சம்பாதித்தது" என்று தெரிவிக்கப்பட்டது.
"கோயிலுக்குச் சொந்தமான 2 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தீட்சிதர்களால் விற்கப்பட்டதாகக் குற்றம் சாட்டிய அறநிலையத்துறை, 20 ஏக்கர் விற்பனை குறித்து மட்டும் ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாகவும்" பொது தீட்சிதர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வாதங்களை மறுத்த அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர், "ஸ்வாதின உரிமை பெற்றவர் எழுதிய உயிலின் அடிப்படையில், குறிப்பிட்ட தீட்சிதர்கள் நிலத்தை விற்பனை செய்துள்ளதாகவும், நிலத்தின் பட்டா இன்னும் கோயிலின் பெயரிலேயே இருப்பதாகவும் விளக்கம் அளித்தார்.
மேலும், சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் சட்டவிரோதமாக மூன்றாம் நபர்களுக்கு பொது தீட்சிதர்கள் விற்பனை செய்தது தொடர்பாகக் கூடுதல் ஆதாரங்களை தாக்கல் செய்ய இருப்பதாகவும்" அறநிலையத்துறை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு நீதிமன்றம் கேள்வி!
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், "கூடுதல் ஆதாரங்களை அறநிலையத்துறை துறை தாக்கல் செய்யலாம் என அனுமதி அளித்தனர். மேலும், கோயிலின் வரவு செலவு கணக்கு விவரங்கள் குறித்த வரைவு திட்டத்தைத் தாக்கல் செய்ய பொது தீட்சிதர்கள் தரப்புக்கு இரண்டு வாரக் காலம் அவகாசம் வழங்கிய நீதிபதிகள், கோயிலின் 101 கட்டளைகளில் எத்தனை கட்டளைகள் தற்போது செயல்படுகிறது? எத்தனை கட்டளைகள் செயல்படவில்லை? கட்டளை தீட்சிதர்களின் பெயர் - முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்துத் தாக்கல் செய்யும்படி" பொது தீட்சிதர்கள் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை டிசம்பர் 19ஆம் தேதிக்குத் தள்ளிவைத்தனர்.