சென்னை: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை ஏற்ற அரசு, தவறான நிர்வாகம் காரணமாக ஏற்பட்ட நிதிச்சுமையில் பல்கலைக்கழகத்தை நிர்வகிக்க புதிய நிர்வாகிகளை நியமித்தது. அதன் தொடர்ச்சியாக, பல்கலைக்கழகத்தில் தற்காலிகமாக பணியாற்றுவதாகக் கூறி, 1,204 ஆசிரியர்களையும், 3,246 ஆசிரியர் அல்லாத பணியாளர்களையும், பொதுப்பணித்துறை, வேளாண்துறை உள்ளிட்ட அரசுத்துறைகளுக்கு மாற்றியதுடன், அவர்களைப் பதவி இறக்கம் செய்தும், ஊதியத்தைக் குறைத்தும் அரசும், பல்கலைக்கழகமும் உத்தரவுகளைப் பிறப்பித்தன.
இந்த உத்தரவுகளை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், பல்கலைக்கழகத்தில் பணியாளர்களின் எண்ணிக்கை குறித்த வரம்பு ஏதும் நிர்ணயிக்கப்படாத நிலையில், தற்காலிகமாக பணியாளர்கள் என எப்படிக் கணக்கிடப்பட்டது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை.
எந்த விசாரணையும் நடத்தாமல் பதவி இறக்கமும், ஊதிய குறைப்பும் செய்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனக் கூறி, பணியாளர்களைப் பதவி இறக்கம் செய்தும், ஊதிய குறைப்பும் செய்த உத்தரவுகளைச் சட்டவிரோதமானது என அறிவித்து உத்தரவிட்டார். மேலும், அவர்களை நான்கு வாரங்களில் பழைய பதவிகளில் நியமிக்க வேண்டும், பழைய ஊதியத்தை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் 4,450 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களைப் பதவி இறக்கம் செய்தும், ஊதிய குறைப்பு செய்தும் அரசு பிறப்பித்த உத்தரவுகளைச் சட்டவிரோதமானது என அறிவித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.