சென்னை: புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர், சென்னை பம்மலில் உள்ள தனியார் மருத்துவமனையில் (பிபி ஜெயின் மருத்துவமனை), உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை நடந்த நிலையில், மறுநாளே (ஏப்ரல் 24) ஹேமச்சந்திரன் மரணமடைந்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, மருத்துவமனையை ஆய்வு செய்த செங்கல்பட்டு மாவட்ட சுகாதார பணிகள் துறை இணை இயக்குனர், மருத்துவமனையின் பதிவை தற்காலிகமாக ரத்து செய்து மே 4ஆம் தேதி உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து தனியார் மருத்துவமனை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், நோயாளியிடம் முன் அனுமதி பெற்ற பிறகே அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.
23 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மருத்துவமனையிடம், சம்பவம் குறித்து விளக்கம் கேட்காமல் பதிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அந்த உத்தரவை ரத்து செய்து, மருத்துவமனை தொடர்ந்து செயல்பட அனுமதியளித்து உத்தரவிட்டார்.
மேலும், மருத்துவ வசதி என்பது கார்ப்பரேட்மயமாகி விட்ட நிலையில், அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், குறைந்த கட்டணம் வசூலிக்கும் மருத்துவமனைகள் அவசியமாகிறது எனவும், இந்த மருத்துவமனைகளின் பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: நர்சிங் கல்லூரி மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்.. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி! - Nursing Students Food Poison Issue