சென்னை: சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் ப.க.பொன்னுசாமியின் மகன் நாவரசு. இவர் கடந்த 1996ம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படித்து வந்தபோது கொல்லப்பட்டார்.
இது தொடர்பான வழக்கை விசாரித்த போலீசார் அதே கல்லூரியில் படித்து வந்த சீனியர் மாணவரான ஜான் டேவிட்டை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிந்து செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இவருக்கு கடலூர் மாவட்ட சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2001ம் ஆண்டு ரத்து செய்தது. பின்னர் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம் 2011ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
இதையடுத்து கடலூர் நீதிமன்றத்தில் சரணடைந்த ஜான் டேவிட், தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுவிக்கக்கோரி அவரின் தாயார் எஸ்தர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதையும் படிங்க : கைதி துன்புறுத்தப்பட்ட வழக்கு; உயரதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - ஐகோர்ட் கேள்வி!
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று(அக் 21) விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மாநில அளவிலான குழு அளித்த பரிந்துரைக்கு தமிழக அமைச்சரவை கடந்த 2023ம் ஆண்டு ஒப்புதல் அளித்து ஆளுநருக்கு அனுப்பி வைத்துள்ளது.
ஆனால், திட்டமிட்டு கொடூரமான முறையில் மருத்துவ மாணவரை கொலை செய்துள்ளதால், ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என ஆளுநர் மறுப்பு தெரிவித்ததால் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டு உள்ளது.
அமைச்சரவை முடிவிற்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டும் என்பதால் ஜான் டேவிட்டை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து மீண்டும் பரிசீலிக்கும்படி அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுவரை ஜான் டேவிட்-க்கு நிபந்தனையுடன் இடைக்கால ஜாமீன் வழங்கியும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்