சென்னை: உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், அமைந்தகரையில் உள்ள எம்.ஜி.எம் மருத்துவமனை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி கொண்ட மருத்துவமனையை கட்டி வருவதாகவும், கட்டுமான பணியில் ஆழ்குழாய் அஸ்திவாரம் அமைக்கும் பணி காரணமாக, சுற்றுப்புற பகுதியில் கடுமையான ஒலி மாசு ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
அந்த பகுதியை பொருத்தவரை பெரும்பாலானவர்கள் மூத்த குடிமக்கள் வசித்து வருவதாகவும், பள்ளி மற்றும் பல்வேறு குடியிருப்பு இருப்பதால் கட்டுமான பணிகளின் சத்தத்தால் அனைவருக்கும் கடுமையான பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் சுட்டிகாட்டியுள்ளார். நள்ளிரவையும் தாண்டி அதிகாலையும் பணிகள் நடைபெறுவதாகவும், இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திற்கு, கட்டுமான சத்தத்தை குறைக்கக் கூறி கடிதம் அனுப்பியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட ஒலி மாசு ஏற்படுவதால், அந்த பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாசு கட்டுப்பாட்டு வாரியம், சி.எம்.டி.ஏ, காவல்துறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனவே அஸ்திவாரம் போடும் பணியை மேற்கொள்ள மாலை 6 மணி முதல் காலை 8 மணி வரை தடை விதிக்க வைக்க வேண்டும், ஒலி மாசுவை கட்டுப்படுத்தாமல் விதிகள் மீறுவதை தடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கின் மீதான விசாரணை கடந்த பிப்.7 ஆம் தேதி, நீதிபதிகள் ஆர். சுப்பிரமணியன் மற்றும் சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்த போது, சி.எம்.டி.ஏ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் புவனேஸ்குமார் கட்டிடம் கட்டுவதற்கான திட்ட அனுமதி இன்னும் தரப்படவில்லை, உரிய கட்டணம் செலுத்தும் பட்சத்தில் திட்ட அனுமதி வழங்கப்படும் என அறிக்கை அளித்தார். இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான பணிகளை தொடர்வதற்கு இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை பிப்ரவரி 12ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியம் மற்றும் ஆர்.சக்திவேல் அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்த போது, திட்ட அனுமதி இல்லாமல் கடந்த ஜூலை முதல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள எப்படி அனுமதிக்கபட்டது என சி.எம்.டி.ஏ-வுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த கூடுதல் தலைமை வழக்கறிஞர், சட்டவிரோத கட்டுமானங்களை கண்காணிக்க வேண்டியது மாநகராட்சி பொறுப்பு தான் என தெரிவித்தார்.
இதையடுத்து தாமாக முன்வந்து சென்னை மாநகராட்சி ஆணையரை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள், கட்டிட அனுமதி பெறாமல் கட்டுமான பணிகளை மேற்கொள்பவர்களுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது? என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.
மேலும், கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் போது ஏற்படும் ஒலி மாசுவை கண்காணிக்க ஏதேனும் நடைமுறை உள்ளதா? இல்லையா? என்பது குறித்து அறிக்கையில் சுட்டிக்காட்டாத தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மீது அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், இது போன்ற நடைமுறைகள் உள்ளதா? இல்லையா? என்பது குறித்து மற்றொரு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை பிப்ரவரி 27ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
இதையும் படிங்க: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை கட்டுமானங்களுக்கு சுற்றுச்சூழல் சான்று அவசியமா? சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?