சென்னை: தமிழ்நாட்டில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு கல்வி நிறுவனங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்களை அமைக்க உத்தரவிடக் கோரி ஃபிரெட் ரோஜர்ஸ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, 'தமிழ்நாட்டில் பொது இடங்களில் ஏற்கனவே உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான கழிப்பிடங்களைப் பாலின சார்பற்ற கழிப்பிடங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், சில இடங்களில் பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் படிப்படியாக பாலின சார்பற்ற கழிப்பிடங்கள் கட்டப்படும்' எனவும் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
இதையடுத்து, தற்போதைக்கு பேருந்து நிலையங்கள், சந்தைகள் போன்ற பொது இடங்களில், மூன்றாம் பாலினத்தவர்களுக்குக் கழிப்பிடங்கள் அமைக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இதுகுறித்த விளக்கத்தைப் தெரிவிக்கும்படி அரசுத்தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு தள்ளிவைத்தனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்