சென்னை: கோவையை சேர்ந்த இளங்கோ என்பவர் அவரது மகளுக்கு கட்டாயக் கல்வி (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் சேர்க்கை கோரி தனியார் பள்ளிக்கு விண்ணப்பித்து இருந்தார். ஆனால் பள்ளி அமைந்துள்ள பகுதியில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் அவரது வீடு அமைந்துள்ளதாக கூறி அவரது மகளுக்கு சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல, கோவையை சேர்ந்த தீபக் என்பவரது மகளுக்கும், இதே காரணத்தைக் கூறி பள்ளியில் சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர்கள் சார்பில் வழக்கறிஞர் D.முத்து ஆஜராகி, ஒரு கிலோ மீட்டருக்கு அப்பால் வீடு அமைந்து இருந்தாலும், குறிப்பிட்ட இரண்டு பள்ளிகளிலும் 25 சதவீத இடங்கள் காலியாக உள்ளதால் சேர்க்கை அனுமதிக்க உத்தரவிட வேண்டுமென வாதிட்டார். கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சார்பில் அரசு வழக்கறிஞர் எம்.ராஜேந்திரன் ஆஜராகி, பள்ளிகளில் காலியாக உள்ள இடங்கள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்தார்.
இதனையடுத்து, நடப்பு கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையில் இரு மாணவிகளின் சேர்க்கை விண்ணப்பத்தை பரிசீலிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதி மனுதாரர்கள் இருவரையும் 20ஆம் தேதி பள்ளி நிர்வாகத்தை அணுக உத்தரவிட்டார். மாணவர் சேர்க்கையை உறுதிப்படுத்த கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி, மாவட்ட கல்வி அதிகாரி உள்ளிட்டோருக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை ஜூலை 1ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: எஸ்.ஆர்.எம் ஹோட்டல் விவகாரம்; ரூ.38 கோடி நிலுவை - சுற்றுலாத்துறை தகவல்! - TRICHY SRM HOTEL ISSUE