சென்னை: செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் தொகுதி திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலை செய்து வந்த சிறுமியை துன்புறுத்தியதாக, ஆண்டோ மதிவாணன் மற்றும் அவரது மனைவி மெர்லினா ஆன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் நீலாங்கரை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தற்போது வரை இருவரும் தலைமறைவாக உள்ள நிலையில், தலைமறைவாக உள்ள இருவரையும் பிடிக்க காவல்துறை சார்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், சென்னை மாவட்டத்தில் பதிவு செய்யப்படும் வன்கொடுமை தடைச் சட்ட வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றமான சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சரணடையும் நாளிலேயே, தங்களது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும்படி அமர்வு நீதிமன்றத்துக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இருவரும் சரணடையும் நாளிலேயே அவர்களது ஜாமீன் மனுவை பரிசீலித்து, இரு தரப்பிற்கும் வாய்ப்பளித்து, சட்டத்திற்குட்பட்டு முடிவெடுக்கும்படி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.