மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றியவர், விருதுநகர் மாவட்டம், தளவாய்புரத்தில் கடந்த 2018ல் நடைபெற்ற மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையேயான கபடி போட்டியில் பங்கேற்க. தனது பள்ளி மாணவிகளை அழைத்து சென்றுள்ளார். அப்போது ஒரு மாணவியை இரவு நேரத்தில் தங்குவதற்கு ஒரு விடுதிக்கு அழைத்து சென்ற உடற்கல்வி ஆசிரியர் அவருக்கு பாலியல்ரீதியாக தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அந்த மாணவி உறவினர்களுக்கு தகவல் கொடுத்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த ராஜபாளையம் அனைத்து மகளிர் போலீசார், சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த திருவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றம் கடந்த 2021ல் உடற்கல்வி ஆசிரியருக்கு 7 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தது. ரூ.50 ஆயிரம் இழப்பீடும் வழங்க வேண்டுமெனவும் உத்தரவிட்டது.
இதை எதிர்த்து உடற்கல்வி ஆசிரியர், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் பிறப்பித்த உத்தரவு:
மனுதாரருக்கு தண்டனை வழங்கிய உத்தரவில் தலையிட வேண்டியதில்லை என்பதால் இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.
படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியாத நிலையில் பாதிக்கப்பட்ட மாணவி இருப்பதால் அவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு என்பதை ரூ.5 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
படிக்கும் இடங்களில் இருந்து விளையாட்டிற்காக வெளியில் செல்லும்போது மாணவிகளை பாலியல்ரீதியான துன்புறுத்தல்களில் இருந்து பாதுகாக்க வேண்டியது அவசியம். அப்போதுதான் அவர்களால் படிப்பையும், விளையாட்டையும் தொடர முடியும்.
எனவே, விளையாட்டு போட்டிகளுக்காக மாணவிகள் வெளியூர் செல்லும்போது அவர்களது பெற்றோர் அல்லது பாதுகாவலரை அரசு செலவில் உடன் அழைத்துச் செல்லவும், விளையாட்டிற்காக செல்லும் மாணவிகளிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவோருக்கு உடனடியாக உரிய தண்டனை பெற்றுத் தரவும் தேவையான சட்டத் திருத்தங்களை தலைமை செயலாளர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
இந்த உத்தரவை நிறைவேற்றியது தொடர்பான அறிக்கையை 2025ம் ஆண்டு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:பொத்தேரி கஞ்சா விவகாரம்; 11 மாணவர்கள் ஜாமீனில் விடுவிப்பு.. 3 பேருக்கு ஜெயில்!