சென்னை: தமிழக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 84 ரவுடிகளை 396 வழக்கறிஞர்கள், 1,987 முறை சந்தித்துள்ளனர். வழக்கு தொடர்பாக கைதிகளை வழக்கறிஞர்கள் சந்தித்தாலும், சிலரின் நடவடிக்கைகள் சந்தேகப்படும்படியாக உள்ளதால் வக்காலத்தில் குறிப்பிட்டுள்ள வழக்கறிஞர்களை மட்டும், இனி கைதிகளை சிறையில் சந்திக்க அனுமதிக்க வேண்டும் என டிஜிபி சங்கர் ஜிவால் காவல்துறை அதிகாரிகளுக்கு சுற்றிக்கை அனுப்பி இருந்தார்.
சில வழக்கறிஞர்கள் தங்கள் தொழிலை தவறாகப் பயன்படுத்துவதாகவும், குற்றவாளிகளுடன் நெருங்கிய உறவு ஏற்படுத்திக் கொள்ளுதல், போலியான ஆவணங்கள் தயாரித்தல், கட்டப்பஞ்சாயத்து செய்தல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், வழக்கறிஞர்களுக்கு எதிராக அடிப்படை ஆதாரங்கள் இல்லாமல் குற்றச்சாட்டுகளைக் கூறி வெளியிடப்பட்டுள்ள காவல்துறை இயக்குனரின் இந்த சுற்றிக்கையை திரும்பப் பெற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதையும் படிங்க: "சித்தா படித்த மருத்துவர்கள் அலோபதி மருத்துவம் செய்ய எந்த தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம்
இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் மோகன கிருஷ்ணன், செயலாளர் கிருஷ்ணகுமார் தமிழக டிஜிபிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், வழக்கறிஞர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும், வழக்கறிஞர்கள் அடிப்படை உரிமையை பாதிக்க செய்யும் வகையிலும் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர். சிறையில் அடைக்கப்பட்டு உள்ளவர்களின் நீதிமன்ற வழக்கு விசாரணை தொடர்பாக கட்சிகாரர்களை சந்திக்க வழக்கறிஞர்களுக்கு உரிமை உள்ளது.
அந்த உரிமையை பறிக்கும் வகையில் காவல்துறை செயல்படுவது நீதிபரிபாலனத்திற்கு எதிரானது என குறிப்பிட்டுள்ளனர். ஒட்டு மொத்த வழக்கறிஞர் சமுதாயத்தையும் சந்தேக கண்ணோட்டத்துடன் காவல்துறை அணுகினால், அது நீதித்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்துவிடும் எனவும் குறிப்பிட்டு உள்ளனர். மேலும் சிறையில் கைதிகளை சந்திக்கும் வழக்கறிஞர்கள் கட்டப்பஞ்சாயத்து, சதி திட்டத்தில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி டிஜிபி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை திரும்ப பெற வேண்டும் எனவும் அதில் வலியுறுத்தி உள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ்நாடு வாட்ஸ் சேனல் மூலம் செய்திகளை உடனுக்குடன் அறிய இங்கே க்ளிக் செய்யவும்