சென்னை: சென்னையைச் சேர்ந்த பாலாஜி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்து, ஒரு சம்பவம் நடந்த பிறகு இரு தரப்பிலும் புகார் கொடுத்தால் அதை எப்படி காவல்துறையினர் கையாள்வது என்பது குறித்து விதிமுறைகளை வகுக்க, 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, இந்த வழக்கை விசாரிக்க நீதிபதிகள் ஜெயசந்திரன், நிர்மல் குமார், ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய சிறப்பு பெஞ்ச் அமைக்கப்பட்டது. இந்த 3 நீதிபதிகளும் அடங்கிய அமர்வில், அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், "தமிழ்நாடு முழுவதும் ஒரே சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் புகார் கொடுத்தால், அதை கவனமாக காவல்துறையினர் கையாள வேண்டும். இதில் யார் உண்மையான குற்றவாளி என்று விசாரணை செய்து கண்டுபிடிக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளை சம்மந்தப்பட்ட கீழமை நீதிமன்றம் கவனமாக கையாண்டு உண்மையாக யார் குற்றவாளி என்று கண்டுபிடித்து முடிவு எடுக்க வேண்டும்.
முதலில் ஒருவர் புகார் அளித்தால், முதலில் அளிக்கப்பட்ட புகார் என்பதற்காக முக்கியத்துவம் அளிக்காமல், இரு தரப்பிலும் அளிக்கப்பட்ட புகாரில் உண்மை என்ன என்பதை ஆவணங்களின் அடிப்படையில் விசாரித்து முடிவு செய்ய வேண்டும். ஏற்கனவே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை பார்த்து வழக்கை கையாள வேண்டும்" என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்
இதையும் படிங்க: மேலும் 32 காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம்; அடுத்தடுத்து ஷாக் கொடுக்கும் தமிழகஅரசு! - TN Police higher officers transfer