சென்னை: சென்னை அடுத்துள்ள காரப்பாக்கத்தில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் நடந்த ஆண்டு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, அவரது மனைவி சியாரா ஜெகதீஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தனர்.
அந்த காப்பகத்தில், சிறப்பு குழந்தைகள் உள்பட ஏராளமானோர் தங்கியிருந்து படித்து வருகின்றனர். அவர்களுடன் நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திராவும், அவரது மனைவியும் உரையாடினர். பின்னர் நீதிபதி பேசுகையில், நான் டி.வி. தொகுப்பாளராகவும், வழக்கறிஞராகவும் ஒரே நேரத்தில் பணியாற்றியவன்.
காப்பகத்தில் தங்கியிருந்து படிக்கும் மாணவர்கள் பொதுத்தேர்வில் குறைவான மதிப்பெண்கள் எடுப்பதாக கூறுகின்றனர். நான் பள்ளி படிப்பின்போது, 60 சதவீத மதிப்பெண் தான் எடுத்தேன். இப்போது நீதிபதியாக இருக்கிறேன். அதனால், ஒவ்வொரு மாணவர்களும் வாழ்வில் முன்னேற மதிப்பெண் மட்டும் போதுமானது இல்லை.
மாணவர்களிடையே நல்ல ஒழுக்கமும், மனித நேயமும் இருந்தால், வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேறலாம். நான் வழக்கறிஞராக இருந்தபோது, சில நீதிபதிகள் வேண்டுமென்றே என்னை கோபப்படுத்தும் விதமாக நடந்து கொள்வார்கள். அந்த பாதிப்பு எனக்கு இருந்தது. அதனால், இப்போது எந்த ஒரு வழக்கறிஞரையும் கோபப்படும் விதமாக நான் நடத்துவது கிடையாது. அதுபோல, நீங்கள் சமுதாயத்தில் நல்ல நிலைக்கு வந்த பிறகும் நல்லவராகவே நடந்துக் கொள்ளவேண்டும்’’ என்று அறிவுறுத்தினார்.