சென்னை: நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மாணிக்கம் தாகூரின் ஆதரவாளர்கள், தேர்தல் விதிகளை மீறி, வாக்காளர்களுக்கு டோக்கன்களை விநியோகித்ததாக குற்றம்சாட்டி, அவரை தகுதி நீக்கம் செய்யவும், அவர் மீது நடவடிக்கை எடுக்கவும் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, விருதுநகரைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், இந்த விவகாரம் தொடர்பாக, ஏப்ரல் 14 ம்தேதி தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்துள்ளதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி சத்தியநாராயண பிரசாத் அமர்வு, தேர்தல் ஆணையத்திற்கு புகார் அளித்த அடுத்த நாள் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில், அவர்களே நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவித்தனர். மேலும், இது சம்பந்தமாக மனுதாரர் தேர்தல் வழக்கு வேண்டுமானால் தாக்கல் செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாலும், தேர்தல் ஆணையத்திற்கு அளித்த புகார் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும் எனவும் தெரிவித்த நீதிபதிகள், விளம்பர நோக்குடன் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: சூறைக்காற்றுடன் மழை: தாளவாடியில் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம்!