சென்னை: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையை சிபிஐ அல்லது சிறப்பு புலனாய்வு குழுவுக்கு மாற்றக் கோரி அதிமுக வழக்கறிஞர்கள் அணி மாநிலச் செயலாளர் இன்பதுரை மற்றும் பாமக செய்தித் தொடர்பாளரும், சமூக நீதிப்பேரவை தலைவருமான வழக்கறிஞர் பாலு ஆகியோர் தாக்கல் செய்திருந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் நிலுவையில் உள்ளது.
தமிழக அரச சார்பில், ஜூலை 3ம் தேதி கள்ளச்சாரய விற்பனைக்கு யார் காரணம்? அதை தடுக்க நியமிக்கப்பட்ட அதிகாரி யார்? ஏன் தடுக்க முடியவில்லை? இதுவரை எவ்வளவு வழக்குகள் கள்ளச்சாராயம் விற்பனை செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளன? எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளது.
இந்நிலையில், நீதிபதிகள் எஸ்.எம் சுப்ரமணியன், குமரப்பன் அமர்வு கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணம் குறித்து தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், 'கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரம் இல்லை என்பதால் தவறுகள் செய்கின்றனர். இது பலரின் உயரிழப்புக்கு காரணமாக உள்ளது. அதனால், மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்து போதிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். தொடரும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க அரசு போதிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க அப்பகுதி மக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும். இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர், காவல் கண்காணிப்பாளர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.