சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 2019 ஜனவரி 1ஆம் தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை பிறப்பிக்கப்பட்டது. பின்னர் அந்த தடை உத்தரவு உறுதி செய்யப்பட்டது. தற்போது, அந்த தடையை உறுதி செய்த உத்தரவை, மறு ஆய்வு செய்யக் கோரி தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் மனு தாக்கல் செய்தனர்.
அவர்கள் தாக்கல் செய்த மனுக்கள், நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. கடந்த முறை வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பால் மற்றும் அத்தியாவசிய பொருட்களை பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்வதற்கு மாற்றாக, பாட்டிலில் விற்பனை செய்வது குறித்து அரசின் நிலைபாட்டை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தனர்.
இந்த நிலையில் இவ்வழக்கு, இன்று (ஜன.31) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ். ராமன் ஆஜராகி, "தமிழ்நாட்டில் 45 முதல் 85 சதவிகிதம் வரை பிளாஸ்டிக் தடை அமல்படுத்தப்பட்டுள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டுல் உள்ள ஆலயங்களில் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த கூடாது என கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் தீமைகள் குறித்து பொதுமக்களிடம் போதுமான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பிளாஸ்டிக் தடை விதிப்பது குறித்து, பல துறைகள் சம்மந்தப்பட்டுள்ளதால், முழுமையாக தடை விதிக்க முடியவில்லை. அதனால், ஒரே துறைக்கு தடை விதிக்கும் வகையில், அதிகாரம் வழங்க வேண்டும் என தலைமை செயலாளருக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தமிழ்நாட்டில் 5 உற்பத்தியாளர்களிடம் இருந்து மாதம் 240 டன் அளவு பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பாலை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்யும் திட்டமும் அரசிடம் உள்ளது. பாட்டிலில் விற்பனை செய்வது தொடர்பாக டெண்டர் அறிவித்து பணிகள் தொடங்க 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.
தென்னக ரயில்வே சார்பில் ஆஜரான பொது மேலாளர், "ரயில் நிலையங்களில் பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு மாற்றாக பாட்டில்களில் தண்ணீர் விற்பனை செய்வது தொடர்பாக மத்திய அரசு கொள்ளை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டில் மட்டும் தனியாக அறிவிக்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், "ஆலயங்களில் பூக்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டு
விற்பனை செய்யப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு முன் என்ன நிலைமை இருந்ததோ? அதே நிலைமை தான் தற்போதும் தொடர்கிறது. பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தடை விதிக்காமல், பிளாஸ்டிக் பைகளை முழுமையாக ஒழிக்க முடியாது.
ஆவின் நிறுவனம் பால் பாக்கெட்டுகளை ஏன் பாட்டிலில் அடைத்து விற்க அறிவுறுத்தக் கூடாது. பாட்டில் உபயோகப்படுத்துவதில் அரசுக்கு ஏதாவது சிக்கல்கள் உள்ளதா?. பாட்டில்களில் பால் விற்பனை செய்ய ஏதுவாக பயனாளர்களிடம் இருந்து பாட்டிலை மீண்டும் திரும்பப் பெறுவது தொடர்பாக அரசு டெண்டர் விடலாமே?.
சென்னையில், பிளாஸ்டிக் கழிவுகளை மனிதர்களே தரம் பிரிப்பது மனிதத்தன்மையற்ற செயல். வீடுகளில் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்காமல் வாங்க முடியாது என தெரிவித்தால், 3 நாட்களில் அனைவரும் தரம் பிரித்து குப்பைகளை ஊழியர்களிடம் ஒப்படைப்பார்கள். தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன? ரயில்வே துறை ரயில் நிலையங்களில் பாட்டில்கள் உபயோகிக்க பயணிகளை கட்டாயப்படுத்த முடியாது என்றாலும், ரயில்களில் பயன்படுத்துவதை குறைக்க அறிவுறுத்தலாம்" என உத்தரவிட்டு விசாரணையை மார்ச் 4ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இதையும் படிங்க: தமிழில் பெயர் பலகை வைக்க அறிவுறுத்தல் - அமைச்சர் மு.பெ.சாமிநாதன்