சென்னை: திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி அருகே ராஜீவ்காந்தி நகர் குடியிருப்பு பகுதியில் வசித்த சமூக ஆர்வலர் ராஜ் மோகன் சந்திரா, கிரிவலப் பாதையில் சிங்க முக தீர்த்தம் அருகே கடந்த 2012ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெட்டி கொலை செய்யப்பட்டார். நில அபகரிப்பு, கனிம வள கொள்ளை ஆகியவற்றை அம்பலப்படுத்தியதால் கொலை செய்யப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாகக் கொலை வழக்குப் பதிவு செய்த திருவண்ணாமலை நகர போலிசார், அப்போதைய கவுன்சிலராக இருந்த அதிமுகவைச் சேர்ந்த திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன், அவரது தந்தை காசி என்கிற வீராசாமி, சகோதரர் செல்வம், அவரது மனைவி மீனாட்சி, முருகன், சடையன், சந்திரசேகரன், ஐயப்பன், விஜயராஜ் மற்றும் சுப்பிரமணி ஆகிய 10 பேரைக் கைது செய்தனர். இவர்களில் வீராசாமி, செல்வம் ஆகியோர் வழக்கு விசாரணையின் போது உயிரிழந்துவிட்டனர்.
இந்நிலையில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் திருப்பதி பாலாஜி என்கிற வெங்கடேசன், மீனாட்சி உட்பட 8 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்துக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் திருவண்ணாமலை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதனை எதிர்த்து எட்டு பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எஸ். ரமேஷ், சுந்தர் மோகன் அமர்வில் நடைபெற்றது. அப்போது மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.கே. ஸ்ரீராம் மற்றும் வழக்கறிஞர் ஜி.உமா மகேஸ்வரி ஆஜராகி, கொலை சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியாக ஒருவர் மட்டுமே இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில், அவரது சாட்சியத்தை அடிப்படையாக வைத்து தண்டனை விதித்தது தவறு என வாதிட்டனர்.
காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர், விசாரணையில் குறைகள் இருப்பதாலோ அல்லது தாமதமாகப் புகார் அளிக்கப்பட்டது என்ற காரணத்தை மட்டுமே அடிப்படையாக வைத்து அவர்கள் குற்றமற்றவர்கள் எனக்கூற முடியாது. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆவணங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளதாகக் கூறினார்.
இதனையடுத்து, வழக்கில் அளிக்கப்பட்ட சாட்சியங்கள் முன்னுக்குப் பின் முரண்கள் உள்ளதாகவும், குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி, 8 பேரையும் விடுதலை செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கோயில் அருகே உள்ள இறைச்சி கடையை அகற்ற கோரிய வழக்கு; மனுவை தள்ளுபடி செய்த சென்னை உயர் நீதிமன்றம்!