சென்னை: கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் நடந்த போலி என்.சி.சி. முகாமில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்தது தொடர்பான வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி வழக்கறிஞர் ஏ.பி.சூரிய பிரகாசம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சிவராமன் மரணம் மற்றும் அவரது தந்தை மரணம் குறித்து அறித்து தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார், நீதிபதி பாலாஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் பி.எஸ் ராமன், " இவ்வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 160க்கும் அதிகமான சாட்சிகள் சேர்க்கப்பட்டு விசாரணை செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து விசாரணை செய்ய அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழுவில் 3 சிறப்பு அதிகாரிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.
இதையடுத்து, "மாணவிகள் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இருப்பதாக சட்டப்பணிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது குறித்து ஏன் இன்னும் விசாரணை நடத்தவில்லை? உயிரிழந்த சிவராமனுக்கும் அரசு அதிகாரிகளுக்கும் என்ன தொடர்பு இருந்தது என்பது குறித்து ஏன் இன்னும் விசாரணை செய்யப்படவில்லை? சிறப்பு குழு இதுவரை என்ன விசாரணை செய்துள்ளது?" என்று நீதிபதிகள் அடுக்கடுக்காக கேள்வி எழுப்பினர்.
அத்துடன், சிறப்பு குழுவின் விசாரணை அறிக்கையை அரசு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.