புதுடெல்லி: தமிழ்நாட்டில் நேரிட்ட ஃபெஞ்சல் புயல் பாதிப்புகளுக்கு உதவும் விதமாக மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசின் பங்காக ரூ.944.80 கோடியை வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
ஃபெஞ்சல் புயலின் தாக்கத்தால் நேரிட்ட கனமழை, வெள்ளம் காரணமாக விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமல, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மக்கள் பெரும் அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த மாவட்டங்களில் மாநில அரசின் சார்பில் நிவாரணப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு ரூ.2000 கோடி நிவாரண உதவி வழங்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக மத்திய தகவல் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், "கடந்த நவம்பர் 30ஆம் தேதி ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மக்களுக்கு நிவாரண உதவி அளிக்கும் வகையில் மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து மத்திய அரசின் பங்காக தமிழக அரசுக்கு ரூ.944.80 கோடி வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வழிகாட்டுதலின்படி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் இயற்கை சீற்றங்கள் மக்கள் படும் இன்னல்களை குறைக்கும் வகையில் மாநில அரசுடன் மோடி அரசு இணைந்து பணியாற்றுகிறது. ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றில் புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக மதிப்பிட அமைச்சகங்களுக்கு இடையிலான மத்திய குழு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழுவின் மதிப்பீடு அறிக்கை கிடைக்கப்பெற்ற உடன் ஏற்கனவே உள்ள வழிகாட்டுதல்களின்படி பேரிடரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து கூடுதல் நிதி உதவிகள் வழங்க அனுமதி வழங்கப்படும்.
இதையும் படிங்க: உயிரை காப்பாற்றிக் கொள்ள உடைமைகளை இழந்த கிராம மக்கள்; மழை ஓய்ந்த பின்பும் இருளிலேயே மூழ்கியுள்ள இருவேல்பட்டு!
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி இந்த ஆண்டு 28 மாநிலங்களுக்கு ஏற்கனவே ரூ.21,718,716 கோடிக்கும் மேலாக வழங்கப்பட்டு்ளது. இதில் 26 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.14878.40 கோடியும், 18 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.4808.32 கோடியும், 11 மாநிலங்களுக்கு மாநில பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.1385 கோடியும், 7 மாநிலங்களுக்கு தேசிய பேரிடர் தணிப்பு நிதியில் இருந்து ரூ.646.546 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
நிதி உதவிகள் தவிர, மத்திய அரசின் சார்பில் வெள்ளம் மற்றும் சூறாவளியால் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களுக்கும் தேவையான தேசிய பேரிடர் மேலாண்மை படையின் குழுக்கள், ராணுவக் குழுக்கள் மற்றும் விமானப்படை ஆதரவு உட்பட அனைத்து தளவாட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன," என தெரிவிக்கப்பட்டுள்ளது.